சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


சிறப்பு மருத்துவ முகாம்


சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் வகையில் 160 மாநகர சுகாதார மையங்கள் மற்றும் 36 மினி கிளினிக்குகள் என மொத்தம் 196 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.




4 லட்சம் நபர்கள் 


மேலும், வீடுகள்தோறும் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் களப்பணியாளர்கள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள மருத்துவமனை செல்ல இயலாத வயது முதிர்ந்த நபர்களை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் 50 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் என மொத்தம் 4 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது


சிறப்பு தடுப்பூசி முகாம்


சென்னை மாநகராட்சியில் 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள்விளையாட்டரங்கில் 20-ந் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திப் பயனடையலாம். இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.