தமிழகத்தில் புதியதாக பிறப்பிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், பெரும்பாலான இடங்களில் ஆட்சியில் உள்ள திமுக வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது. தற்போது, இந்த உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற தேர்தல் நடைபெற இருக்கிறது. 


திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின்போது 4 சதவீதம் மட்டுமே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடஒதுக்கீடு தொடர்பாகவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தங்களுக்கு  உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினர் 4 சதவீத இடஒதுக்கீடு சம்மதம் தெரிவித்து திமுகவுடன் கூட்டணி அமைத்து கொண்டனர். 




இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து தற்போது நகர்ப்புற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 4 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் என்றால் அதில் 8 வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் போட்டியிட முடியும். இந்த 8 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 8 மாவட்ட தலைவர்கள் போட்டியிட்டாலும் கூட, மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படும். 


அதேபோல், மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்ற திமுக தீவிரம் காட்டும். அப்படி இருக்கையில் கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த பதவிகள் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. 


அப்படியே, காங்கிரஸ் கட்சிக்கு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வாய்ப்பு வழங்கினாலும் திமுக கவுன்சிலர்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே, கடந்த 9 உள்ளாட்சி தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிர்வாகிகள் திமுக கட்சியின் பிரதான 'உதய சூரியன்' சின்னத்தில் போட்டியிட்டனர். இதற்கே காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினருடன் கருத்து வேறுபாடு உண்டானது. 




இந்தநிலையில், நகர்ப்புற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் திமுக அளிக்கும் 4 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டால் கூட்டணி தொடரும். தொடர்ந்து, கூடுதல் இடங்களை கேட்டு காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தால், அக்கட்சி தனித்து போட்டியிடும் நிலைமைக்கு தள்ளப்படும். ஆனால், இத்தகைய பேச்சுவார்த்தையில் இழுபறி செய்யவே திமுக கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 



ஏற்கனவே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மரியாதைக்குரிய வகையில் இட பங்கீடு கிடைக்கவில்லை என்றால், தனித்து போட்டியிடலாம் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திமுக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள மற்றொரு கட்சியான மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாகவும் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடிபில் வீடியோக்களை காண