ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.
அதனை தொடர்ந்து, ”'ஜெய்பீம்' அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்” என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து சூர்யா வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் ”மதிப்புக்குரிய திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப்பெற்றேன். 'ஜெய்பீம்' திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாரட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப் படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே. சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.
மேலும் மறைந்த திரு. ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், திரு. பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 'பத்து இலட்சம்' ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும், அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.
மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது