TN SIR ECI:  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், இன்று தொடங்கி அடுத்த ஒரு மாதத்திற்கு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

Continues below advertisement


சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்:


வாக்காளர் பட்டியல் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதது, முகவரி மாறியவர்களின் வாக்குரிமை திருத்தப்படாதது மற்றும் ஒரே நபருக்கு இருவேறு இடங்களில் வாக்குரிமை இருப்பது என பல சர்ச்சைகள் நீண்டகாலமாக தொடர்கிறது. இந்நிலையில் தான், அந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் விதமாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தகுதியான நபர்கள் மட்டும் வாக்களிப்பதை உறுதி செய்யவும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், இன்று தொடங்கி வரும் டிசம்பர் 4ம் தேதி வரை, வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளன.



எந்த ஆவணங்கள் அடிப்படையில் திருத்தம்?


அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகளுடன் சேர்ந்து, அரசு அதிகாரிகளும் வீடு வீடாக சென்று, இந்த வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட உள்ளன.  2002 மற்றும் 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டே, இந்த பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, அனைத்து வீடுகளுக்கும் இந்த ஆய்வுக்குழு செல்லப்போவது இல்லை. மாறாக 2002 மற்றும் 2005ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இருக்கிறதோ, அவர்களது வீடுகளுக்கு மட்டுமே சென்று இந்த ஆய்வுகள் நடைபெற உள்ளன. அந்த நபர்கள் உயிருடன் இருப்பதையும், அதே முகவரியில் தொடர்ந்து வசித்து வருவதையும், இரட்டை வாக்காளர் அட்டை இல்லை என்பதையும், இந்த திருத்தப் பணிகள் மூலம் அதிகாரிகள் உறுதி செய்ய உள்ளனர்.


வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?


அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் அடங்கிய குழு வீடுகளுக்கு வந்து, 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களின் விவரத்தை கேட்டு வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவார்கள். அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தையும் வழங்குவார்கள். அவற்றை பூர்த்தி செய்து, அடுத்த முறை அந்த குழு வரும்போது உரிய ஆவணங்களுடன் படிவத்தை சமர்பிக்க வேண்டும். இதற்காக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு வீட்டிற்கு 3 முறை வருவார்கள்.


விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி:


கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, யாரேனும் உங்கள் வீட்டில் காலமாகி இருந்தால் அந்த விவரங்களை குடும்பத்தினர் தெரிவிக்க வேண்டும். முகவரி மாற்றம் எதுவும் இருந்தால் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது. முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் அதற்கான ஆவணங்களை டிசம்பர் 7ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதிக்குள் சமர்ப்பித்து தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்யலாம். 


ஏற்கப்படும் ஆவணங்கள்:


1. எந்தவொரு மத்திய அரசு/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனத்திலும் வழக்கமான ஊழியர்/ஓய்வூதியம் பெறுபவருக்கு வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டைகள், ஓய்வூதிய கட்டண உத்தரவு


2. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டைகள்/சான்றிதழ்கள்/ஆவணங்கள்./ வங்கிகள்/உள்ளூர் அதிகாரிகள்/PCU


3. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்


4. பாஸ்போர்ட்


5. அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள்/பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன்/கல்விச் சான்றிதழ்


6. மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வதிவிடச் சான்றிதழ்


7. வன உரிமைச் சான்றிதழ்


8. ஓ.பி.சி/எஸ்.டி/எஸ்.சி அல்லது ஏதேனும் சாதிச் சான்றிதழ்


9. தேசிய குடிமக்கள் பதிவேடு (எங்கிருந்தாலும்)


10. மாநில/உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு


11. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.


12. ஆதாரைப் பொறுத்தவரை, 9.09.2025 தேதியிட்ட கடிதம் எண். 23/2025-ERS/தொகுதி II இல் வெளியிடப்பட்ட ஆணையத்தின் உத்தரவுகள் பொருந்தும்.


சர்ச்சைகளும், எதிர்ப்புகளும்:


சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் ஏற்கனவே சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. அதன் முடிவில் சுமார் 62 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையால் பாஜகவிற்கு எதிரான சிறுபான்மையின மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கணடனம் தெரிவித்தன. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன.


இந்நிலையில் தான் இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கிய, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கோவா, புதுச்சேரி, சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் இன்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ளன. இதில் 51 கோடி மக்களின் வாக்காளர் உரிமைகள் அய்வு செய்யப்பட உள்ளன. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட இருப்பதாக, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.