மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக, கங்கனம்புத்தூர், அருண்மொழித்தேவன், கடுவன்குடி, ஏனாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா சாகுபடி நீரில் மூழ்கி முழுமையாகச் சேதமடைந்துள்ளது. வெள்ள நீர் வடிவதற்குத் தடையாக இருந்த ஆகாயத் தாமரைகள்தான் இவ்வளவு பெரிய சேதத்திற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பசுமைத் தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி, தமிழக அரசின் அலட்சியப் போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Continues below advertisement

ஆகாயத் தாமரைகளால் மூழ்கிய விளைநிலங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கியப் பாசன ஆதாரங்களுள் ஒன்றான காவிரி ஆற்றின் கிளை ஆறான வெட்டாற்றில், கடந்த சில ஆண்டுகளாக ஆகாயத் தாமரைகள் கட்டுக்கடங்காமல் படர்ந்துள்ளன. கடந்த மாதம் கனமழை பெய்தபோது, வயல்களில் தேங்கிய வெள்ள நீர் வெளியேற முடியாமல் இந்த ஆகாயத் தாமரைகள் பெரும் தடையாக இருந்துள்ளன. இதனால், கங்கனம்புத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப் போயின. வெள்ள நீர் விரைவாக வடியாத காரணத்தால், விவசாயிகள் பலத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். வயல்களில் உழைத்த உழைப்பும், முதலீடும் வீணானதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சௌமியா அன்புமணி ஆய்வு

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக, பசுமைத் தாயகத்தின் தலைவர் டாக்டர் சௌமியா அன்புமணி இன்று மயிலாடுதுறைக்கு வருகை புரிந்தார். அவர் கங்கனம்புத்தூர், அருண்மொழித்தேவன் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று, நீரில் மூழ்கிச் சேதமடைந்த சம்பா பயிர்களைப் பார்வையிட்டார். விவசாயிகளிடம் ஏற்பட்ட இழப்புகள் குறித்துக் கேட்டறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, வெட்டாற்றில் ஆகாயத் தாமரைகள் படர்ந்து, நீர் வடிவதைத் தடுத்திருந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செளமியா அன்புமணி 

Continues below advertisement

தமிழக அரசு மீது கடும் கண்டனத்தை பதிவு செய்த செளமியா 

தூர்வாருதல் நிதி அலட்சியம்: "டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் தூர் வாருவதற்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதிலும், ஒதுக்கப்படும் நிதியைத் தூர் வாருவதற்கு முறையாகப் பயன்படுத்துவதில்லை. பெயரளவுக்கு ஆற்று மற்றும் வாய்க்கால் ஓரங்களில் மட்டும் தூர்வாரிவிட்டு, கணக்கு காட்டப்படுகிறது. இதனால், மழைநீர் வடிய வழியின்றி விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றனர்."

கொள்முதல் நிலையங்களில் நெல் முளைப்பு: "நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல், அவை தேங்கிக் கிடக்கின்றன. மழையின் காரணமாக அந்த நெல்மணிகள் முளைத்துவிட்டன."

ரேஷன் அரிசியின் தரம்: "முளைத்துவிட்ட இந்தப் பழைய நெல்லை அரவைக்கு அனுப்பி, அதைத்தான் தமிழக அரசு மீண்டும் நமக்கு ரேஷன் மூலம் வழங்கும். இதனால், கெட்டுப்போன, துர்நாற்றம் வீசும் அரிசியைத்தான் மக்கள் உண்ண வேண்டிய அவல நிலை ஏற்படும். இது பொதுச் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும்."

பழைய நிவாரணம் நிலுவை: "கடந்த ஆண்டு பெய்த மழையின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை."

விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு

"தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளை அரசாங்கம் வஞ்சித்து வருகிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உடனடியாகப் போதுமான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். மேலும், இதுபோன்ற சூழலைத் தவிர்க்க, வருங்காலங்களில் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், ஆகாயத் தாமரைகளை அகற்றுவதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்," என்றும் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.