தமிழ்நாட்டில் அடிக்கடி மின் தடை ஏற்பட அணில்களும் காரணம் என அண்மையில் சொல்லியிருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. மீம்ஸ்கள் ஜீவித்திருக்கும் சோஷியல் மீடியா உலகத்துக்கு ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ கணக்காக அமைந்தது அமைச்சரின் இந்த விளக்கம். போதாத குறைக்கு எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் செந்தில் பாலாஜியை கலாய்த்துத் தள்ளின.  தனக்கே டஃப் கொடுக்கிறார் செந்தில் பாலாஜி என்கிற கொண்டாட்டத்தில் ‘நல்லவேலை நான் பிழைத்துக்கொண்டேன்’ எனப் பாட்டாகவே பாடிவிட்டார் தெர்மகோல் புகழ் சிட்னி செல்லூர் ராஜூ. செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசைப் பரிந்துரைத்திருக்கிறார் அவர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ‘விஞ்ஞானம்..விஞ்ஞானம்...’ எனத் தனது ட்விட்டர் பதிவில் நக்கல் செய்திருந்தார்.






கேலியால் கொதித்துப்போன அமைச்சர், ’அ.தி.மு.க ஆட்சியில் டிசம்பர் மாதத்தோடு மின் பராமரிப்புப் பணிகள் முடிந்துவிட்டன. மரக்கிளைகள் வெட்டப்படவில்லை. அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் ஓடுவதால் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்றேன். அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக மருத்துவர் ராமதாஸ் சித்தரிக்கிறார். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-விடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம். அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால். இணையத்தில் தேடிப் படித்திருக்கலாம்’ என பதிலடி கொடுத்துள்ளார். 


ராமர் பாலம் கட்ட அணில்தான் உதவியது என்று சொன்னால் கேள்வி எழுப்பாமல் நம்புபவர்களுக்கிடையே அணில்களால் அணு உலைகளைக் கூட ஸ்தம்பிக்கச் செய்துவிட முடியும் என்று சொன்னால் அது நம்ப முடியாததாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை, அமெரிக்காவில் ஒரு மாதத்தில் மட்டும் அணில்களால் தொடர்ச்சியாக ஐம்பது மின் வெட்டுகள் நிகழ்ந்திருக்கின்றன. மோண்டானாவின் அணு ஆயுதக் கிடங்கில் குழிவுபோல ஏவுகணைகளில் துளையிட்டு வைத்திருந்தன தரையிலேயே நகரும் அணில்கள்.  ஜெர்மனி அணில்களை தற்கொலைப்படை என அழைக்கிறது. சைபர் தாக்குதல்களை விட அணில்கள் ஏற்படுத்தும் பாதிப்புதான் சர்வதேசப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாகக் கூறுகிறது உலகளாவிய சர்வே ஒன்று. அணில்கள், பறவைகள், எலிகள், பாம்புகள் மட்டுமே வருடாந்திரத்துக்கு ஒரு நாட்டில் மட்டும் 1700 மின்வெட்டுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் சுமார் ஐம்பது லட்சம் மக்கள் பாதிப்படைகிறார்கள்.8 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரம் பாதிப்படைகிறது. இத்தனையும் செய்வது மனிதர்கள் நம்மைக் கண்டால் காத தூரம் தெறித்து ஓடும் ஒரு சின்னஞ்சிறிய அணில்.


சைஸைப் பார்த்து எடைபோடாதே என்பது எதற்குப் பொருந்தவில்லை என்றாலும் அணில்களுக்குப் பொருந்தும். தெற்றுப்பல் தெரிய கொட்டைகளைக் கொரிக்கும் குட்டி உருவம் மட்டுமல்ல அவை அரசாங்கத்தையே ஆட்டம் காணச் செய்யும் அரக்கன்.