திமுகவில் வாரிசு அரசியல் ஒன்றும் புதிததல்ல. கணக்கு கேட்ட எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியதும், மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வைகோவுக்கு கட்டம் கட்டப்பட்டதும், போட்டியாக இருப்பார் என்று நினைத்த அழகிரி, அலேக்காக தூக்கியெறியப்பட்டதும் வரலாறு. இப்போது, உதயநிதிக்காக கனிமொழி குறி வைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
வயதில், அனுபத்தில், கட்சி பணியில் இளையவராக இருந்தாலும், அரசியலில் ’அ’ன்னா ’ஆ’வன்னா படித்துக்கொண்டிருந்த உதயநிதிக்கு அசால்டாக இளைஞரணி செயலாளர் பதவி தூக்கிக் கொடுக்கப்பட்டது. அப்போது இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் ஓரங்கட்டப்பட்டார்.
திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டபோதே, மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் என்று அறிவிக்கப்படாத நிலை அந்த கட்சியில் ஏற்பட்டுவிட்டது. அதை நிலைநிறுத்திக்கொள்ளும்விதமாக உதயநிதியும் அவரது குடும்பத்தாரும் செயல்படத் தொடங்கினர்.
மு.க.அழகிரி எப்படி மு.க.ஸ்டாலினை முந்திவிடக்கூடாது என நினைத்து, கலைஞர் கருணாநிதியை வைத்தே அவரை கட்சியை விட்டு நீக்க வைத்தார்களோ, அதேபோன்று, இப்போது உதயநிதியை கனிமொழி ஓவர்டேக் செய்துவிடக்கூடாது என, அதே கவனத்துடன் களப்பணியாற்றுகின்றனர் என பொங்குகிறார்கள் அக்காவின் ஆதரவாளர்கள்.
அதற்கும் காரணமும் இருக்கதான் செய்கிறது. கட்சிக்கு வந்ததுமே இளைஞரணி செயலாளர், முதல் சட்டமன்ற தேர்தலியே முக்கிய தொகுதியில் சீட், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலை. இன்னும் சொல்லப்போனால், நிழல் முதலமைச்சர் போல உதயநிதிக்கு மட்டுமே கொடுக்கப்படும் முக்கியத்துவம். இவையெல்லாம் கனிமொழிக்கு தொடக்கத்தில் இருந்தே சற்று கசந்துதான் வந்தது. அதையெல்லாம் தாங்கிக்கொண்டு கடந்து வந்தார்.
ஆனால், இப்போது நேரடியாக சீண்டப்படுவதைதான் கனிமொழியால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்கிறார்கள் அவருடன் சேர்ந்து பயணிப்போர். இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டபோது, மகளிரையும் இளைஞரணிக்குள் கொண்டுவரும் விதமாக ‘இளம் பெண்கள் பேரவை’யை உருவாக்க முயற்சிகள் எடுத்தார் உதயநிதி. ஆனால், அதற்கு அப்போதே கனிமொழி தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த முயற்சியை கிடப்பில் போட்டார்.
இப்போது தேர்தல் முடிந்து சகல வல்லமையுடன் திமுக ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், மீண்டும் திமுக இளைஞரணியில் பெண்களை சேர்க்க முயற்சிக்க அல்ல சேர்த்தே விட்டார் உதயநிதி. கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில்தான் இந்த வேலையை பார்த்து வைத்திருக்கிறார் அவர்.
இதனால், கடும் அதிருப்தி அடைந்த கனிமொழி உடனடியாக தன்னிச்சையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘ திமுக மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம்பெண்களை உருவாக்க வேண்டும் என்றும், அந்த விதத்தில் 18 முதல் 30 வயதுடைய பெண்களை திமுக மகளிரணியில் உறுப்பினராக இணைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். உன்னிப்பாக அந்த அறிக்கையை உற்றுபார்த்தோம் என்றால், 18 முதல் 30 வயதுடைய பெண்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று அவர் பொத்தம் பொதுவாக சொல்லவில்லை. திமுகவின் மகளிரணியில் இணைக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார்.
இப்படி கனிமொழி அறிக்கைவிட முழு காரணம், உதயநிதி கோவையில் நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில், இளைஞரணியில் பெண்களை சேர்த்ததுதான் என்கிறார்கள் திமுக மகளிரணியினர். Chennai Sangamam : ’சென்னை சங்கமத்திற்கு செக்’ நம்ம ஊர் திருவிழா அறிவிப்பால் அப்செட்டில் கனிமொழி..!
இதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களின் நலன்களை காக்க அரசு அமைத்த குழுவில் கனிமொழிக்கு இடம் தராதது, தான் முன்னின்று நடத்தும் சென்னை சங்கமம் விழாவை முடக்கும்விதமாக, அதற்கு பதில் ‘நம்ம ஊர் திருவிழா’ என தங்கம் தென்னரசு அறிவித்தது என இப்படி எல்லா நிலைகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக கனிமொழி நினைக்கிறார்.
எப்போதும் அக்கா இப்படி அமைதியாகவே கடந்துபோக மாட்டார்கள் என்று எச்சரிக்கின்றனர் கனிமொழி ஆதரவாளர்கள். என்னதான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!