தை திருநாட்களான ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னையில் 3 நாட்களுக்கு ‘நம்ம ஊர் திருவிழா’(Namma Ooru Thiruvizha) என்ற பெயரில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என நேற்று தங்கம் தென்னரசுவை அமைச்சராக கொண்ட தமிழக கலை பண்பாட்டு பேரவை அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பால் திமுக மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏனென்றால், கனிமொழி முன்னெடுப்பால், கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் விதமாக, சென்னையில் அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’(Chennai Sangamam) என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த 10 வருடங்களாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி முடக்கப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சென்னை சங்கம் நிகழ்ச்சியை இந்த பொங்கல் முதல் நடத்த கனிமொழி திட்டமிட்டிருந்தார். அதனை குறிக்கும் விதமாகவே இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த ‘மார்கழி மக்களிசை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பறை இசைத்து அந்த விழாவை தொடங்கியும் வைத்தார்.
அப்போது, பலரும் கனிமொழி தலைமையில் மீண்டும் சென்னை சங்கமம் உயிர் பெறும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், சென்னை சங்கம நிகழ்ச்சியை காண ஆவலாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ‘சென்னை சங்கமம் – திருவிழா, நம்ம தெருவிழா’ என்ற நிகழ்ச்சிக்கு மாற்றாக ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் பொங்கலன்று 3 நாட்களுக்கு சென்னையில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தவர் என்று தெரிந்தும், தன்னிடம் எந்த ஆலோசனையும் பெறாமல், தன்னிச்சையாக கலை பண்பாட்டுத் துறை சார்பில் ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் பொங்கலன்று நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது கனிமொழிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
இந்த அறிவிப்பால் அப்செட்டான கனிமொழி, ’என் தலைமையில் நிகழ்ச்சி நடக்கக் கூடாதுன்னு சிலர் சதி பண்றாங்க’, என தனக்கு நெருக்கமானவர்களிடம் கொட்டித் தீர்த்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சமீபத்தில் இலங்கை தமிழர்களின் நலனுக்காக 300 கோடி ஒதுக்கிடு செய்தும், முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களின் மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்ய ஆலோசனை குழுவை தமிழக அரசு அறிவித்தது. குழுவுக்கு தலைவராக சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குழு உறுப்பினராக கலாநிதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்ட நிலையில், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் கனிமொழி அந்த குழுவில் சேர்க்கப்படவில்லை. இந்த அறிவிப்பால் ஏற்கனவே அதிருப்தி அடைந்திருந்த கனிமொழி, தற்போது சென்னை சங்கம நிகழ்ச்சியை முடக்கும் விதமாக ‘நம்ம ஊர் திருவிழா’ என அறிவிப்பட்டிருப்பதால் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.