கமிஷன், கரப்ஷன், கலெக்சன் என கடந்த அதிமுக ஆட்சியை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின்.



முதல்வர் மு.க.ஸ்டாலின்


திமுக ஆட்சிக்கு வந்தால் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் இருக்காது என்று சொல்லி ஊர் ஊராக சென்று ஓட்டு கேட்டார்.  ஆட்சி அமைத்தது முதல் இந்த 8 மாதத்தில் தனது அமைச்சரவை மீது எந்த கறையும் பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்து அரசை நடத்தி வருகிறார். அதனால்தான், நான் முதல்வராக பதவியேற்கவில்லை, பொறுப்பேற்றிருக்கிறேன் என்றும், இது எனது அரசு அல்ல ; நமது அரசு என்றும் அவரால் சொல்ல முடிந்தது.


ஆனால், முதல்வருக்கே தெரியாமல் சில அமைச்சர்கள் கள்ளாக்கட்டி வருவதும், சில எம்.எல்.ஏக்கள் ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பிடுங்கி வருவதும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆடிய கால் சும்மா இருக்குமா ? என்பதுபோல அரசியலில் விட்ட பணத்தை பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பலர் களத்தில் மீண்டும் இறங்கத் தொடங்கியிருக்கின்றனர்.






10 வருடம் பட்டதெல்லாம் போதும், இனி தொட்டதெல்லாம் துலங்க வேண்டும் என கான்ட்ராக்டர்களை மிரட்டி சில அமைச்சர்கள் கமிஷன் கேட்கிறார்கள் என்று நம்மை தொடர்புகொண்டார் அரசு பணிகளை எடுத்துச் செய்யும் ஒரு ஒப்பந்ததாரார். நாமோ, ஊழலற்ற ஆட்சி, கமிஷன் இல்லாத அரசு, இந்தியாவே பாராட்டும் கவர்மெண்ட் அப்படிதானே நடந்துக்கொண்டிருக்கிறது என்றோம்.


நீங்க வேற ஏங்க,  வெந்த புண்ணுல வேல பாய்ச்சுறீங்க, தென்னமரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி கட்டுங்கிற கதையா இருக்குங்க எங்க பாடு என்றார். அப்படி என்ன தான் நடக்குது என கேட்டோம்.


சமீபத்துல புளியந்தோப்பு KP பார்க்குல கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் ‘தொட்டாச் சிணுங்கி’ மாதிரி தொட்டாலே உதுறுதுன்னு சொன்னாங்க, நெல்லையில ஒரு ஸ்கூல்ல கழிப்பறை இடிந்து விழுந்து 3 பசங்க செத்துப்போனாங்க, இப்ப திருவொற்றியூர்ல குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அப்படியே இடிந்து விழுந்து தரைமட்டமானதுங்கிறாங்க. இதுக்கெல்லாம் காரணம் கட்டடத்தை கட்டின கான்ட்ராக்டர்தான் அப்படின்னு மொத்த பழியையும் எங்கமேல தூக்கிப்போட்டர்றாங்க இந்த அரசியல்வாதிங்க.






நாங்க என்ன பண்றது ? அரசு பணியான ஒரு பள்ளி கட்டடமோ, மருத்துவமனையோ, அடுக்குமாடி குடியிருப்போ கான்ட்ராக்ட் எடுத்து கட்டனும்னா கடந்த அதிமுக ஆட்சியில மொத்த கட்டுமான செலவுல அமைச்சருக்கு 8%, ஆளுங்கட்சியோட மாவட்ட செயலாளருக்கு 3%, ஒன்றிய செயலாளருக்கு 2%, அரசு பொறியாளர்களுக்கு 1% அப்டின்னு கமிஷன் கொடுக்க வேண்டியிருந்தது.


கமிஷன் மட்டுமே நாங்க இவ்வளவு கொடுத்தா எப்படி கட்டுமானத்தை தரமா, நிறைவா, உறுதியா எங்களால கட்ட முடியும் ? ஒரு கதவணைக்கு பெயின்ட் அடிக்கனும்னா கூட அந்த தொகுதி எம்.ல்.ஏவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கு, நாங்க என்ன எங்க காச போட்டு மக்களுக்கு சேவை செய்யனும்னா வேலை பண்றோம். சேவை செய்றோம்னு சொல்லிட்டு நிக்குற அரசியல்வாதிகளே இந்த மாதிரி கமிஷன் வாங்கி கல்லா கட்டுனா நாங்க என்ன பண்றது ? என புலம்பித் தீர்த்தார்.



அதிமுக அமைச்சர்கள் மீது அப்போது புகார் அளித்த ஸ்டாலின்


சரிங்க, இது கடந்த அதிமுக ஆட்சியில தானே ? இப்பதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில கமிஷன் வாங்காத ஊழலற்ற ஆட்சி நடந்துகிட்டு இருக்குல்ல ? இப்பவுமா கமிஷன் கேக்குறாங்க என்றோம்,


அட என்னங்க நீங்க, பத்திரிகைகாரன்னு சொல்றீங்க, வெவரம் தெரியாம இருக்கீங்களே என நம்மை நொந்துக்கொண்டு தொடர்ந்தார். ஊழலற்ற ஆட்சி, கமிஷன், கலக்‌ஷன் இல்லாத அரசுன்னு முதல்வர் சொல்றது எல்லாம் சரிதான், ஆனா அவரு காதுக்கே போகாம கமுக்கமா கல்லா கட்டுற அமைச்சருங்க எல்லா இருந்துகிட்டுதானே இருக்காங்க. நான் சொல்றது உண்மை நிலவரமுங்க, சத்தியமுங்க. எந்த அமைச்சருக்கு,  என்ன வெவரம் எல்லாம் தயவு செஞ்சு கேட்காதீங்க.


ஆனா, கடந்த அதிமுக ஆட்சியில அமைச்சருங்களுக்கு கொடுத்த பர்ஷண்டேஜை விட இப்போது அதிகமா கேக்குறாங்க. அதிகம்னா, கடந்த ஆட்சியில அமைச்சருக்கு 8% கேட்டாங்க, இப்போ அது 12% ஆக உயர்ந்திருக்கு. இதுவாங்க கமிஷன் இல்லாத ஆட்சி ? அமைச்சருக்கு 12%, மாவட்ட செயலாளருக்கு 4%, எம்.எல்.ஏ, ஒன்றியம் அப்டின்னு கமிஷன் கொடுத்து கட்டுப்படியாகலங்க. இது மட்டுமில்லாம துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர் அப்டின்னு அமைச்சர்கள் கேட்டகிரிலேயே தனித்தனியாக கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கு.






நாங்களே பல கட்டடம் நஷ்டத்துக்குதான் கட்டித் தொலையுறோம். இல்லன்னா கட்டடம் கட்டலன்னு சொல்லி லைசன்ச வேற கேன்ஷல் பண்ணிடுவாங்க. இது இப்ப இல்லங்க, காலங்காலமா நடந்துகிட்டுதான் இருக்கு. இங்க லஞ்சமும் கமிஷனும் கொடுக்காம எதுவும் செய்ய முடியாது.


இனிமே நான் இந்த அரசாங்கத்துல காண்ட்ராக்ட் எடுத்து கட்டடம் கட்றதையே  விடப்போறேன். ஏன்னா, எனக்கு ஒவ்வொரு கட்டடம் கட்டும்போதும் பக்குபக்கு இருக்கு. அப்படி அந்த கட்டடம் ஒரு கட்டதுல இடிந்து விழுந்து யாருக்காவது எதாவது ஆகியிடுச்சுன்னா அந்த பாவமெல்லாம் என்னதான வந்துசேரும், அரசியல்வாதிங்க அழகா தப்பிச்சுப்பாங்க, பழியை மட்டும் நாங்க சுமக்கனும், ஜெயிலுக்கு போகனும். இது ஒத்துவராதுன்னு விடப்போறேனுக.


ஆனா ஒன்னு, அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் எதுல வேண்ணா ஊழல் பண்ணுங்க, கமிஷன் வாங்குங்க. இந்த பள்ளி கட்டடம், ஆஸ்பத்திரி பில்டிங், குடியிருப்பு இதுபோன்ற சிமெண்ட் ஒர்க் பண்ணும்போது மட்டும் தயவு செஞ்சு கமிஷன் கேட்டு கான்ட்ராக்டர்களுக்கு தொல்லை கொடுக்காதீங்க. இது உசுரு சம்பந்தபட்ட விஷயமுன்னு தெரிஞ்சு, இதுலயாவது லஞ்சம் கேட்காமல் ஒதுங்கி இருங்கன்னு மட்டும் கேட்டுக்குறேன் என்றார் மிரட்சியாக.



தரைமட்டமான திருவொற்றியூர் வாரிய குடியிருப்பு


இந்த ஒப்பந்ததாரர் சொன்னது உண்மைதானா ? இப்போதும் இந்த திமுக ஆட்சியிலும் அமைச்சர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறதா என இன்னொரு ஒப்பந்ததாரரிடம் விசாரித்தோம். அவரும் ஆமாம் என்று ஒத்துக்கொண்டார். இதுதான் நடைமுறை, இது எல்லா இடத்திலும் பழகிவிட்டது. நாங்களும் ஊரோடு ஒத்து வாழ் என்பதுபோன்று, லஞ்சம் கொடுத்துதான் கட்டடங்களை கட்டுகிறோம், இதை மாற்றுவது அவ்வளவு சாதாரண காரியமல்ல என்று சொல்லி கழன்றுக்கொண்டார்.


இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் திக் என்று இருக்கிறது. கமிஷன் கொடுக்காமல் எந்த ஒப்பந்ததாரரும் அரசு கட்டடங்களை கட்டவே முடியாதா ? அப்படி கமிஷன் கொடுத்து கட்டப்படும் கட்டடங்கள் எப்படி உறுதியாக இருக்கும் ? அதற்குள் நுழையும் அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு யார் பொறுப்பு ? என்ற கேள்விகள் எல்லாம் நெஞ்சை துளைத்தெடுக்கின்றன.



தொட்டால் உதிறும் புளியந்தோப்பு குடியிருப்பு


’அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரத்தின் விளக்கத்தை துடைத்து தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, ‘அரசியல் பிழைத்தோர்க்கு கரப்ஷன் கூற்றாகும்’ என்றல்லவா இந்த அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர் என்ற வேதனை பொங்கி எழுகிறது.


ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன் என்று உறுதிபட சொல்லி செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுபோன்று சில அமைச்சர்கள் கமிஷன் கேட்பதாக வரும் தகல்களை உறுதி செய்து, அதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, சிமெண்ட் வொர்க் தொடர்பான அரசு கட்டுமானங்களில் எந்த சமரசமும் செய்யாமல், கமிஷனுக்கு இடம் கொடுக்காமல் கட்டுமானங்கள் உறுதித்தன்மையுடன் கட்டப்படுவதை முதல்வர் உறுதி செய்யவேண்டும்.


இது எனது அரசல்ல, நமது அரசு என்று முழங்கிய முதல்வர் இதை செய்துவிட்டால், இதே ஒப்பந்ததாரர்கள் கமிஷன் இல்லாம வேலை நடக்குதுங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்வதையும் இதேபோன்று பதிவிட நினைக்கிறோம்.  செய்வாரா முதல்வர் ? இதனை செய்வாரா ?