தினம்... தினம்... ஏதாவது ஒரு போஸ்டர்... ரகளை, ஆர்ப்பாட்டம் என்று அதிமுக கட்சிக்குள் கலகம் வெடித்து காரபூந்தி தின்றவர்கள் கூட காரச்சாரமாக ஒழிக கோஷம் போட்டு நாங்களும் இருக்கிறோம் என்று தங்கள் இருப்பை பதிவு செய்கின்றனர். இதற்கு காரணம் ஒற்றை தலைமை என்ற வார்த்தைதான். அந்த வகையில் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் படத்தை கிழித்து எடப்பாடியாருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.


கல்லு போல இருந்த கல்லு கோட்டையாக இருக்கு தஞ்சை கோட்டை என்று அதிமுகவினர் மார் தட்டிக் கொண்டு இருந்தனர். இப்போ அதை ஒவ்வொரு கல்லாக பெயர்த்து வருகின்றனர் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவில் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்எல்ஏவுமான வைத்திலிங்கத்திற்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்ததுதான். ஜெ., ஆட்சியில் இருந்தபோது தேர்தலில் தோற்று போய் வருத்தத்தில் இருந்த வைத்திலிங்கத்தை அழைத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரும் அளவிற்கு கொடி கட்டி பறந்தார்.


தஞ்சைன்னா அது வைத்திலிங்கம் கோட்டைப்பா என்று பெயர் வாங்கி வந்தவர். இப்போ அந்த கோட்டை சீட்டு கட்டு கோட்டை போல பொலபொலன்னு உதிர்ந்து வருவதையும், தன் ஆதரவாளர்கள் என்று நினைத்தவர்கள் அடிக்கும் அந்தர் பல்டியை கண்டு ஆடிதான் போய் உள்ளார். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் கடைவீதியில் அதிமுக சார்பில்  அமைக்கப்பட்டிருந்த கோடைகால தண்ணீர் பந்தலில் இருந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் படத்தை கிழித்தும், பிய்த்தும் ஒழிக கோஷம் போட்டு எடப்பாடியாருக்கு ஆதரவு கோஷம் எழுப்பி அட்ராசிட்டி செய்துள்ளனர்.




திருபுவனம் பேரூராட்சி அதிமுக நகர செயலாளர் சிங்.செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பந்தலுக்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டில் இருந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் படம் ஆகியவற்றை கிழித்து கீழே எறிந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஒழிக, ஒழிக என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்துக் கொண்டே பொதுமக்கள் அவர்களை கடந்து சென்றனர்.




நேற்று வரைக்கும் ஆதரவுப்பா... இன்று முதல் எதிர்ப்புதான்பா என்று அட்ராசிட்டி காட்டி நாங்களும் இருக்கோம் என்று அட்டெனன்ஸ் போட்டுள்ளனர். இன்னைக்கு எடப்பாடியாருக்கு ஆதரவு... நாளைக்கு ஜெயக்குமாருக்கு மவுசு வந்தால் இதே கதிதான் எடப்பாடியாருக்கும் ஏற்படும் என்று பொதுமக்கள் சிலர் வாய்விட்டே சொல்லி சென்றதையும் கேட்க முடிந்தது. ஒற்றை தலைமை என்ற வார்த்தை தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இந்த பொதுக்குழு முடிந்தது. வரும் பொதுக்குழுவில் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்று அடிமட்ட கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண