TN Governor Ravi: தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்கள் தொடர்பான ஆளுநர் ஆர். என். ரவியின் கருத்துகளுக்கு, சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கைக்கு பாராட்டு
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர். என். ரவி பேசியதாக சில கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ”தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஆளுநர் ரவி, தேசிய கல்விக் கொள்கையை இந்தியாவின் கல்வி நிலப்பரப்பை அடிப்படையில் மாற்றியமைத்த ஒரு திருப்புமுனை தருணம் என்று பாராட்டினார். புதுமை கலாச்சாரத்தை வளர்ப்பது, தொழில்முனைவோரை வளர்ப்பது மற்றும் மறைந்திருக்கும் திறனை வெளிப்படுத்துவதன் மூலம், இந்தக் கொள்கை இந்தியாவை அறிவுசார் சொத்து உருவாக்கத்தில் ஒரு பெரிய பாய்ச்சலுக்குத் தள்ளியுள்ளது மற்றும் தொழில்முனைவோர் திறமை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மேம்பாட்டில் உலகத் தலைவர்களிடையே நாட்டை நிலைநிறுத்தியுள்ளது.
”அரசு கல்வி நிலையங்களில் தரமில்லை”
உயர்கல்வியில் உள்ள இருவேறுபாடு குறித்து ஆளுநர் தீவிர கவலை தெரிவித்தார் - தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நாட்டின் சிறந்தவற்றுடன் போட்டியிடும் போது, மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடர்ந்து சரிவில் உள்ளன. தரத்தில் ஏற்படும் இந்த சரிவு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது, அவர்கள் முதன்மையாக தங்கள் கல்வி மற்றும் வாய்ப்புகளுக்காக இந்த அரசு நிறுவனங்களை நம்பியுள்ளனர். #ViksitBharat மற்றும் # ViksitTamilNadu- நோக்கிய பயணத்தின் போது , இவ்வளவு பெரிய மக்கள் தரமான கல்வியை இழந்திருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என ஆளுநர் மாளிகையின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வம்பிழுக்கும் ஆளுநர்?
ஆளுநர் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு என்பது தொடர்ந்து நிலவி வருகிறது. பதவிக்காலம் முடிந்தும் ரவி ஆளுநராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சைலண்ட் மோடில் இருந்த ஆளுநர், தற்போது மீண்டும் மாநில அரசின் மீதும், கல்வி அமைப்பின் மீதும் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வரும் தேசியக் கல்வியை பாராட்டியுள்ளதோடு, நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பதாக கூறப்படும் தமிழ்நாடு அரசின் கல்வி அமைப்பை ஆளுநர் ரவி தரமில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, ஆளுநரின் பேச்சுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் நிர்வாகியை போல் பேச வேண்டாமென்றும், தேசிய அளவில் கல்வியில் தமிழ்நாட்டின் தரம் மேலோங்கி இருப்பதாகவும், மத்திய அரசு வெளியிட்டு வரும் தரவுகளே அதற்கு சான்று என்றும் களமாடி வருகின்றனர்.