உதயநிதி ஸ்டாலினும் சபரீசனும் ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாரித்ததாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பாக்கிக்கொண்டிருக்கும் ஆடியோ விவகாரம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் பிடிஆர் இதனை முழு முற்றாக மறுத்து கடந்த 26ஆம் தேதி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



உதயநிதியுடன் பிடிஆர்


அண்ணாமலையை விமர்சித்த பிடிஆர்


முதல் ஆடியோ வெளியானபோது அது வெட்டி, ஒட்டப்பட்ட போலி என விளக்கம் கொடுத்திருந்த பிடிஆர், இரண்டாவது ஆடியோ வெளியானதும் இது ஒரு கோழைத்தனமான முயற்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.


முதல்வர் இல்லத்தில் காக்க வைக்கப்பட்டாரா பிடிஆர் ?


இந்நிலையில், பிடிஆர் விளக்க வீடியோ வெளியிடும் முன் தன்னிலை விளக்கம் அளிக்க சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்றதாகவும் அங்கு அவர் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. நிதி அமைச்சர் வந்திருக்கும் தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டும், உடனடியாக அவரை முதல்வர் சந்திக்கவில்லை என்றும் ஏற்கனவே ஒத்துக்கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கிளம்பி சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.


முதல்வர் தன்னை சந்திக்காமல் வெளியே சென்றதும் தெரிந்தும் மீண்டும் அவர் இல்லம் திரும்பு வரை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் இல்லத்திலேயே நீண்ட  நேரம் காத்திருந்ததாகவும், பல மணி நேர காத்திருப்புக்கு பின்னரே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்து பேசியதாகவும் கூறப்படுகிறது.


உதயநிதி சபரீசனை புகழ்ந்த காரணம் என்ன ?


முதல்வரை சந்தித்து பிடிஆர் பேசிய பிறகுதான், அடுத்த நாள் அவர் வீடியோவும் அறிக்கையும் வெளியிட்டு அது தன்னுடைய குரல் இல்லை என்றும் தான் அப்படி எங்குமே பேசியது கிடையாது என்றும் கூறியிருந்ததோடு உதயநிதியையும் சபரீசனையும் புகழ்ந்தும் பேசியிருந்தார்.






அமைச்சரவை மாற்றமா..?


அதே நேரத்தில் திமுக முதன்மை செயலாளர் கேன்.என்.நேரு அமைச்சர்கள் நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகியோரை முதல்வர் இல்லம் அழைத்து வந்து இலாக்கா மாற்றம் தொடர்பாக விவாதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதி வருகின்றனர்.


டி.ஆர்.பி. ராஜாவுக்கு வாய்ப்பு ?


குறிப்பாக, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட சில புதிய முகங்களை அமைச்சர்களாக்கிவிட்டு சரியாக செயல்படாத சில அமைச்சர்களை மாற்றும் மன நிலையில் முதல்வர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


முதல்வர் டெல்லி சென்று திரும்பிய பின்னர் தமிழக அமைச்சரவையிலும் ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் வட்டாரத்தில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.