MK Stalin slams H.Raja: நடுராத்திரியில் ஏன் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்? எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
MK Stalin: சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள்.நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்?என எச் ராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்? இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் எச். ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
எச் ராஜா கருத்து:
"ஹிந்தியை அழிக்க வேண்டும் என்றால், முதலில் சன் ஷைன் ஸ்கூலுக்கே போக வேண்டும். திமுகவில் உள்ளவர்கள் ஒருவராவது உப்பு போட்டு சாப்பிடுகிறவர் இருந்தால், முதலில் அந்த ஸ்கூலுக்கு போங்க. திமுகவில் மொத்தம் 48 சிபிஎஸ்இ ஸ்கூல்கள் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை நான் கொடுக்கிறேன். அந்த ஸ்கூல்களில் ஹிந்தி கற்று கொடுக்கலாமா என்று போராட்டம் நடத்துங்கள். முடிந்தால், 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்திய எழுத்துக்களை அழியுங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்!" என எச்.ராஜா பேசியிருந்தார்.
முதல்வர் பதிலடி:
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தி திணிப்பு விவகாரத்தில் கருத்துகளை தெரிவித்த ஆளுநர் ரவி மற்றும் பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்த அறிக்கையில்
எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக் களம் காணாமல் இருந்ததில்லை,தேசிய கல்விக் கொள்கை வழியாக மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதியினை உணர்ந்துதான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதனை எதிர்க்கிறது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகவே என்றென்றும் சிந்திப்பதை யும், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதையுமே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற பா.ஜ.க. ஆட்சியாளர்களும் அவர்களின் ஏஜெண்ட்டுகளும் மட்டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசிக் கொண்டிருப்பார்கள். மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி அது போலப் பேசியிருப்பது புதியது மல்ல, பொருட்படுத்த வேண்டியதுமல்ல.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக,தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் என பா.ஜ.க.வும், பா.ஜ.க. கூட்டணியும் ஆட்சி செய்கின்ற வட இந்திய மாநிலங்களில் எத்தனை வடஇந்திய மொழிகளைப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்? ஆளுநரிடமும் பதில் இருக்காது. அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்காது.
எச்.ராஜாவுக்கு காட்டமான பதில்:
ரயில்நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியதுதானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்?ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது? அந்தந்த மாநில மொழிகளுக்குரிய உரிமையைநிலைநிறுத்தும் முறையில்,அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில்உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய்நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரயில்வேயிலும் ஒன்றிய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித் திணிப்பு.