நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் பலரும் விலகி வந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய பேச்சாளரான காளியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார். இது நாம் தமிழருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
எங்களுக்காக யாரும் இல்ல:
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு காளியம்மாள் நிருபர்களுக்கு முதன்முறையாக பேட்டி அளித்தார். ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது, தமிழர்கள் கடலோர மக்களை ஒரு ஓரமாக ஒதுக்கிப் பார்க்கிறார்கள். எங்களுக்கான பெரிய பங்களிப்பு கிடையாது. ராஜ்யசபாவில் எங்களுக்காக பேசுறதுக்கு ஆளு கிடையாது. மக்களவையில் எங்களோட குறைகளைப் பேசுறதுக்கு யாரும் கிடையாது.
ஒரு சட்டத்தைத் திருத்துறாங்கனா கடலோர முறைப்படுத்துதல் சட்டம், நீர்கொள்கை, மீன்பிடி கொள்கையா இருக்கட்டும் யாரை கேட்டு அந்த கொள்கையை உருவாக்கியிருக்கீங்க? தேசிய மீன்வளக் கொள்கையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசு. அதற்கு யாருடன் விவாதிக்கப்பட்டது. எந்த மக்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது?
யாரை கேட்டு திருத்துனீங்க?
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் திருத்தம் செய்றாங்க. அது யாரை கேட்டா திருத்துனீங்க? மீன்பிடிக்கப் போறது நாங்க. கேரளாவுல இருக்குற மீனவர்கள் கடலுக்கு பட்டா கேட்குறாங்க. எங்களுக்கே பட்டா இல்லாமல் நாங்க தவிக்குறோம். நாங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகளாக கூட நடத்தப்படவில்லை. ஏதிலிகள் போல நடத்தப்படுகிறோம். எங்களுக்கான எந்த உரிமையும் கிடையாது, சலுகையும் கிடையாது. மீன்வளத்துறை அமைச்சர்னு ஒரு பதவி. அதுவும் எங்களுக்கு இல்லை. எங்களோட பிரச்சினையை யார் இப்போது பேசப்போகிறார்கள்?
கடல்குடி மக்களா பிறந்தது குத்தமா?
ஒரு தாயை இழந்த பிள்ளையப் போல நாங்கள் இருக்கிறோம். இதுதான் யதார்த்தமான உண்மை. எங்களுக்கான உரிமையை கூட பெற முடியாத மக்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். என் வீட்டுக்காரர் இலங்கையில் இருந்து வந்த பிறகு 60 நாள் நான் சிகிச்சை கொடுத்தேன். ஒவ்வொரு பெண்களும் என்ன பாவம் செய்தோம்? கடல் குடி மக்களாக பிறந்தது குத்தமா?
கச்சத்தீவு
எங்களோட கச்சத்தீவை கொடுத்துவிட்டு, எங்களோட நிலத்திற்கு நாங்கள் போகும்போது நீங்கள் அத்துமீறி வருகிறீர்கள்? என்கிறார்கள். இந்த எல்லைக் கோட்டை யாரு போட்டீங்க? இந்திய - இலங்கை அரசும் போடுவீங்களா? எங்களுக்கான பிரதிநிதித்துவத்திற்காகவாது எங்களை உட்கார வச்சுருக்கனும்ல? இது யாரால் வரையறுக்கப்பட்டது?
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அவர் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. ஆனால், அவர் திமுக-வில் இணைய இருப்பதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலம் தமிழ்நாடு மீன்பிடி சட்டத் திருத்தம், கச்சத்தீவு விவகாரம் என திமுக-விற்கு எதிராக காளியம்மாள் பேசியுள்ளார்.