பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசியச் செயலாளரும் கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகர பாஜக தலைவர் சந்திரன் மற்றும் கண்ணங்குடி மண்டல தலைவர் பிரபு , சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன் ஆகிய மூவர்கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். எச்.ராஜா மீது குற்றச்சாட்டி இவர்கள் தங்கள் பொறுப்பை ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில், அவர்களை கட்சியில் இருந்து நீக்கியதாக புகாரை விசாரணை செய்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த கட்சியின் அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான செயல்களிலும் ஈடுபட்டுள்ள காரணத்தால் இவர்கள் மூவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுடன் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வியை தழுவியிருந்தார். தனது தேர்தல் தோல்விக்கு சிவகங்கை மாவட்ட மற்றும் காரைக்குடி நகர பாஜக நிர்வாகிகள் முறையாக கட்சிப்பணி ஆற்றாததே காரணம் என கட்சி மேலிடத்திற்கு எச்.ராஜா புகார் அளித்திருந்த நிலையில், அதனை முற்றிலும் மறுத்திருந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள், கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் எச்.ராஜாவிற்கு காரைக்குடி நகரப்பகுதியில் 8000 வாக்குகளை அதிமாக பெற்றுத் தந்ததாக காரைக்குடி நகர செயலாளர் சந்திரன் கூறியிருந்தார். தான் இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று முன்கூட்டியே எச்.ராஜாவிற்கு தெரிந்ததால் கட்சி மேலிடம் தேர்தல் செலவிற்காக கொடுத்த எல்லா நிதியையும் அவரே வைத்துக் கொண்டதாக குற்றம்சாட்டியதுடன் தற்போது காரைக்குடியிலேயே எச்.ராஜா 4 கோடியில் வீடு கட்டி வருவதாகவும் பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். எச்.ராஜாவின் மருமகன் சூரிய நாராயணன் தரப்பில் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நேரடியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கே சென்று எச்.ராஜா மீது புகார் அளித்துள்ள பாஜக மாவட்ட மற்று நகர நிர்வாகிகளை சந்தித்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ஹெச்.ராஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்.ராஜா மீது குற்றச்சாட்டு கூறி நிர்வாகிகள் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராஜினாமா செய்தவர்களை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
Also Read: எச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை தொடக்கம்: நேரடியாக சிவகங்கையில் களமிறங்கிய மேலிடம்!