Annamalai: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் அரசியல் யாத்திரை ஒன்றை துவங்கியுள்ளார். கடந்த 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த யாத்திரையை ராமேஸ்வரத்தில் துவக்கி வைத்தார்.


ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் இந்த நடைபயணத்தின் ஒருபகுதியாக பனை மரம் சார்ந்த தொழிலாளர்களை சந்தித்தப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசுகையில், "தமிழர்கள் பனைமரத்தை எவ்வளவு சார்ந்து இருக்கிறோம் என்பதை பார்க்க முடிகிறது. பனைமரம் சார்ந்த தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் அரசு கொடுக்கவேண்டும். பனைமரம் சார்ந்த பொருளாதாரம் என்பது மிகவும் முக்கியம். பனைமரத்தின் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. அதனை பெரிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.


அரசு கள்ளை திரும்ப கொண்டு வரவேண்டும். பனைமரம் சார்ந்த பொருட்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டும். பனைமரம் சார்ந்த இந்த தொழில் குறித்த எங்களின் ஆய்வின் படி, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்” என பேசியுள்ளார். 


கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ’என் மண் என் மக்கள்' என்கிற  பெயரில் 168 நாட்கள் நடைபயணம் நடைபெறும் எனவும், இதில் 1700 கி.மீ தூரம் பயணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 168 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கப்புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார்கள். ராமேஸ்வரத்தில் தொடங்கும் பாதயாத்திரை, சென்னையில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


பாதயாத்திரை தொடக்க விழாவில் அண்ணாமலை பேசுகையில், ”தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவதே முக்கிய பணி. 2024ஆம் ஆண்டு மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார். 2024ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் 400 எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 40 எம்.பிக்கள் பாஜக சார்பாக வெற்றி பெறுவார்கள்.  நம்முடைய பாஜகவின் வளர்ச்சியை உறுதி செய்யும், நமது வெற்றியை உறுதி செய்யும் நடைபயணமாக இந்த பயணம்  இருக்கும். நான் பட்டி தொட்டி எல்லாம் செல்ல போகிறேன். மக்களிடம் பேச போகிறேன்” எனக் கூறினார். 




கலைஞனை கொண்டாடுவது சரி...! முட்டாள் கதாப்பாத்திரத்தை எதற்கு? - பொறுப்பை மறந்த மீம் கிரியேட்டர்ஸ்!