கலவர பூமியாக மாறிய மணிப்பூருக்கு எதிர்க்கட்சி எம்.பிகள் குழு சென்றிருந்தனர். அங்கிருந்து வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, “மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய் எனவும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும்போது அவர்களை எப்படி தேற்றுவது என தெரியவில்லை. பாலியல் வல்லுறுவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை பெண் எம்.பிக்கள் மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அந்த பெண்ணின் தாயார் தனது கணவனையும் மகனையும் இழந்தும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட மகள் என அவர் பெரும் துயரத்தில் உள்ளார். அவர்களை எதைச் சொல்லி தேற்றுவது என தெரியவில்லை” என கனிமொழி கூறினார்.

  


மேலும் அவர், நாங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறிவரும்போதே, அந்த இடத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதனைக் கண்டித்து பெண்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை முதலமைச்சரோ அமைச்சர்களோ என யாருமே சென்று சந்திக்கவில்லை. மக்கள் இன்னும் போர்டு வைத்துக்கொண்டு மக்கள் போராடும் நிலை உள்ளது. முதலமைச்சரை, அமைச்சர்களை, எம்.எல்.ஏக்களை காணவில்லை என மக்கள் போராடிக்கொண்டுள்ளனர். பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மிகவும் வருத்தப்படும் விஷயம் என்னவென்றால், எங்களை காப்பாற்றவேண்டிய காவல்துறையே கலவரக்காரர்களிடம் எங்களைக் கொண்டுபோய் விட்டது தான். இந்த விஷயம் வெளியான பின்னரும் கூட அந்த காவலர்களுக்கு தண்டனை எதுவும் வழங்கவில்லை என கூறியதாக கனிமொழி கூறீனார். 


மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் தற்போது வன்முறையாக மாறி சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பழங்குடியின பெண்கள் அங்கு நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 


மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், அங்குள்ள சூழல் தொடர்பாகவும் அறிந்து கொள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூருக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, களநிலவரம் தொடர்பாக அறிய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


கனிமொழி, திருமாவளவன் அடங்கிய குழு:


அந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், ஐக்கிய ஜனதா தளத்த சேர்ந்த ராஜின் ரஞ்சன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே, திமுகவை சேர்ந்த கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொல் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் என மொத்தம் 20 எம்.பிக்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க சென்று திரும்பியுள்ளனர்.