மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தில் திமுக, மதிமுக, பாமக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 800-க்கும் மேற்பட்டவர்கள் அஇஅதிமுகவில் இணையும் விழா நடந்தது. அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மாற்று கட்சியிலிருந்து விலகி வந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதிமுகவிலிருந்து அண்மையில் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளர் மார்கோனி ஏற்பாட்டில் நடந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடைமடைப் பகுதிகளில் குறுவைப் பயிர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் நேரிடை விதைப்பு மற்றும் நடவு செய்த குறுவை பயிர்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அரசு இதனை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
அதேபோல் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆறு நாட்களுக்கு ஒருமுறை 8 நாளுக்கு ஒருமுறை சில இடங்களில் மாதக் கணக்கில் குடிநீர் வராத நிலை உள்ளது. இதனை களைய வேண்டிய அரசு மெத்தனமாக உள்ளது. குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75% அழிந்துவிட்டது. மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற முறை வைக்காமல் பாசனத்திற்கு அரசு போதிய தண்ணீர் வழங்க வேண்டும், இதில் அரசு கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. குறுவை பயிர்களில் இரண்டு வகையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடி விதைப்பு செய்த குறுவை முளைக்காத நிலையில் அதனை பிடுங்கி நடவு செய்த பயிர்களும் தண்ணீர் இன்றி செத்து மடிந்து விட்டது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் குறுவை பயிருக்கு நஷ்ட ஈடாக காப்பீட்டு திட்டம் இருந்தது.
ஆனால் திமுக ஆட்சியில் குறுவைக்கு காப்பீடு திட்டம் இல்லாத நிலை உள்ளது. குறுவை காப்பீட்டை அமல்படுத்துவதில் அரசு தவறிவிட்டது. என்.எல்.சி விவகாரத்தில் கதிர்கள் வந்த பயிர்கள் 10, 15 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. என்எல்சி வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது. கொடூரமான தாக்குதல் ஆகும் பிள்ளைகளை இழந்து தவிப்பது போன்று பயிர்களை இழந்து விவசாயிகள் கொடுமையான செயலாகும். இதனை அரசு தவிர்த்து இருக்க வேண்டும். ஆனால், அதை தடுக்காமல் அதற்கு அரசு துணை போனது தவறான செயலாகும். என்எல்சி நிறுவனம் அறுவடை முடியும் வரை வாய்க்கால் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.
ஜூன் 12 மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதை சாதனையாக நினைத்து திமுக அரசு தண்ணீர் திறந்து விட்டது. ஆனால், தண்ணீர் திறப்பிற்கும் முன்பு நிபுணர்களை அழைத்து பருவமழை பொழிவு எவ்வாறு இருக்கும் என ஆராயாமல் தண்ணீர் திறந்ததால் தற்போது பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் இல்லை மேட்டூரிலும் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது, இதனால் கடைமடை பகுதிகளில் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய அரசு தவறிவிட்டது. திமுக அரசு எதிர்க்கட்சியான அதிமுகவே விமர்சிப்பதை விட பாஜகவைதான் அதிக அளவு விமர்சிக்கிறது என்ற கேள்விக்கு திமுக ஈடியை பார்த்து இடி விழுந்தால் போல் அஞ்சுகின்றனர். அதனால் தான் பாஜகவை அதிமாக விமர்சனம் செய்வதாக தெரிவித்தார்.