சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் ஒருபக்கம் கூட்டணி, தொகுதி பங்கீடு என ரகசியமாக பேச்சுவார்த்தையை நடத்தி வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் விருப்ப மனுவையும் விநியோகித்து வருகிறது. அதேநேரம் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க தற்போது உள்ள எம்எல்ஏக்கள் செயல்பாடுகள், மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு, தொகுதியில் செல்வாக்கான நபர் யார் என தனியார் நிறுவனங்கள் மூலம் ரகசிய சர்வேயை திமுக தலைமை எடுத்துள்ளது. 

Continues below advertisement

சென்னையை வாரி சுருட்டிய திமுக

ஆளுங்கட்சியான திமுக கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் சென்னையை முழுமையாக கைப்பற்றியது. மொத்தமுள்ள 16 தொகுதியையும் வாரி சுருட்டியது. ஆனால் இந்த முறை சென்னை திமுகவிற்கு கடும் சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல அதிமுக- பாஜக களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை தியாகராயநகர் தொகுதியில் கடந்த முறை வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது. எனவே அந்த தொகுதியை குறிவைத்து அதிமுக மற்றும் பாஜக போட்டி போட்டு காய்நகர்த்தி வருகிறது. இதே போல சென்னையில் திமுகவிற்கு வீக்கான தொகுதிகளில் ஏற்கனவே களப்பணியை தொடங்கியுள்ளது அதிமுக. இதில் விருகம்பாக்கம் தொகுதியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

தனசேகரன் vs பிரபாகர் ராஜா

விருகப்பாக்கம் தொகுதியில் செல்வாக்கு மிக்க நபராக இருப்பவர் திமுக நிர்வாகி தனசேகரன்,கடந்த 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் தனசேகரன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் வணிகர் சங்க பேரமைப்பு தலைவராக இருந்த விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜாவிற்கு 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை காலகட்டத்தில் வணிகர்சங்கத்தின் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.

Continues below advertisement

எனவே வணிகர்களின் வாக்குகளை கவரும் வகையில் பிரபாகர் ராஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேநேரம் தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறித்ததால் பிரபாகர் ராஜா மீது தனசேகரன் கடும் அதிருப்தியில் இருந்தார். திமுக சார்பாக வேட்பாளர் பட்டியில் வெளியான தினத்தில் தனசேகரனை சந்தித்து பிரபாகர் ராஜா வாழ்த்து பெற அவரது வீட்டிற்கு நேரடியாக சென்ற போது தனது ஆதரவாளர்கள் மூலம் தனசேகர் தாக்கவும் செய்தார். 

 அதிமுகவை வீழ்த்திய பிரபாகர் ராஜா

இதனையடுத்து அறிவாலயம் வந்த தனசேகரன் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் முறையிட்டார். தனசேகரனை சமாதானம் செய்த ஸ்டாலின், தேர்தல் பணியை செய்யும் படி உத்தரவிட்டு திருப்பி அனுப்பி வைத்தார். தலைமையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் தனசேகரன் ஈடுபட்டு வந்தார். இறுதியாக அதிமுக மீது அப்போது இருந்த அதிருப்தி காரணமாக வாக்குகள் திமுகவிற்கு சாதகமாக சென்றது. அதிமுக வேட்பாளர் விருகை ரவியை விட பிரபாகர் ராஜா  சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து விருகம்பாக்கம் தொகுதியை பிரபாகர் ராஜா தக்க வைப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், கட்சி பணியிலும் மக்கள் பணியிலும் முழு கவனம் செலுத்தவில்லையென விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த திமுகவினரே தெரிவித்து வருகிறார்கள்.

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு.?

எனவே இந்த முறை விருகம்பாக்கம் தொகுதி பிரபாகர் ராஜாவிற்கு வழங்க வாய்ப்பு இல்லையென அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது. அதேநேரம் தனசேகரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா.? என்றால் அதுவும் கேள்வி குறிதான். தனசேகரன் மீது கட்டப்பஞ்சாயத்து புகார் ஏற்கனவே உள்ள நிலையில், தனசேகரனின் பேரன் தனது தாத்தாவின் அதிகாரம் இருக்கும் தைரியத்தில் காரை கொண்டு மோதி கல்லூரி மாணவர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தால் தனசேகர் மீது பிளாக் மார்க் விழுந்துள்ளது.  எனவே இந்த இரண்டு பேருக்கும் இல்லாமல் மற்றொருவரை திமுக தலைமை தேடி வருகிறது. அதே நேரம் திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும்பட்சத்தில் அக்கட்சிக்கு விருகம்பாக்கம் ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.