3ஆவது, 4ஆவது மொழிகள் நம் எதிரிகள் இல்லை என்றும் முதலில் 2வது மொழியை முறையாக கற்றுக் கொடுங்கள் என்றும் மும்மொழி விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர், இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


"முதலில் 2வது மொழியைக் கற்றுக் கொடுங்க"


மத்திய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


தேசிய கல்வி கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் என பாஜக தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


ப. சிதம்பரம் என்ன பேசினார்?


இந்த நிலையில், மும்மொழி விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், "அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழிதான் முதல் மொழியாக இருக்க வேண்டும். நம் மாநிலத்திலாவது 2வது மொழியைக் கற்பிக்க முயற்சி செய்து வருகிறோம்.


ஆனால், பல மாநிலங்களில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முயற்சி செய்வது இல்லை. இதில் 3வது மொழி வேறு. 3வது, 4வது மொழிகள் நம் எதிரிகள் இல்லை. முதலில் 2வது மொழியைக் கற்றுக் கொடுங்கள்" என தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, மும்மொழி கொள்கை அமல்படுத்திய இந்திய பேசும் மாநிலங்களில் இரண்டாவது மொழி பேசுவோரின் எண்ணிக்கையே குறைவு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


அதேபோல, இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலத்தை முதன்மை மொழியாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், ஆங்கிலமும் பேசும் தாய்மொழி தமிழ் பேசுபவர்களின் விகிதம் 1991 இல் 13.5% ஆக இருந்தது, இது 2011 இல் 18.5% ஆக உயர்ந்தது.