நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் விளவன்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக ஊடகம் மூலம் தகவல் அறியப்பட்டேன். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இந்திய அரசியலைமைப்புச்சட்டப்படி காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சொல்லி அவர் இணைய வழியில்  தகவலை சட்டபேரவை தலைவருக்கும் சட்டப்பேரவை முதன்மை செயலாளருக்கும் அனுப்பி உள்ளார்.


அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியும் சட்டமன்ற பேரவை விதி 21 இன் F படிவம் இணைப்புப் படிவத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்றால் ஒரு படிவம் இருக்கிறது. அந்த படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அப்படிவத்தில் கேட்கப்பட்ட விசயங்களை தவிர வேறு எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் எந்த நாள் முதல் நான் பதவியில் இருந்தேன் என அந்த படிவத்தை முறைப்படி எழுதி சமர்பித்தால் அது பரீசீலனையில் எடுத்துக் கொள்ளப்படும், அதன் அடிப்படையில் நேற்றே சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தன்னுடைய பதவி விலகல் கடிதத்தினை தன்னுடைய கைப்பட எழுதி இணைய வழியில் என்னுடைய கவனத்திற்கும், சட்டப்பேரவையின் முதன்மை செயலாளருக்கும் அனுப்பினார். இரண்டு செய்திகளையும்  என்னுடைய கவனத்திற்கு முதன்மை செயலாளர் அனுப்பி வைத்தார். அதை நான் பரீசீலனை செய்து பார்த்ததில் விஜயதாரணி முறைப்படி தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை கொடுத்திருப்பதை தெரிந்து கொண்டேன்.


மேலும் நேற்று காலை அவர் என்னை தொலைபேசியில் அழைத்து நான் தான் அதை என்னுடைய கைப்பட எழுதியிருக்கிறேன். நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டேன். ஆகவே காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்  பதவியில் இருந்து விலகுகிறேன் என்பதை தொலைபேசி வாயிலாக சொன்னார். அதனை சட்டப்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தேன். அதன்பின் அவர்கள் இருவருடைய  கடிதத்தையும் ஆய்வு செய்து பார்த்ததில் முறையாக பதவி விலகல் கடிதத்தை வழங்கியிருப்பதை பார்த்து தெரிந்து கொண்டேன், அதன் அடிப்படையில்  அவருடைய பதவி விலகலை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று  தெரிவித்தார்.  சட்டமன்றத்தில் நடக்கும் பொழுது கடிதத்தை கொறடாவும் தரலாம், அந்த கட்சியின் தலைமையும் தகவல் தெரிவிக்கலாம். அது ஒன்றும் குற்றமில்லை” என்று தெரிவித்தார்.