நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்தார்கள். அப்போது, சுமார் 30 நிமிடங்கள் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினோம். நாளைய தினம் அதாவது வருகின்ற 27ம் தேதி திருப்பூரை அடுத்த பல்லடத்தில் நடைபெறும் மாபெரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி பங்கேற்கிறார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்திய ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் முடித்து வைக்க பிரதமர் மோடி வருகை தரும் விழாவில், என்னையும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்கள். 



நேற்று காலை பாஜகவில் இருந்து மேலிட தலைவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும், அதன் தலைவர் என்ற சார்பிலும் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடியுடன் நானும் கலந்து கொள்கிறேன். இதன்மூலம், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து, பாரதிய ஜனதா கட்சி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. குறிப்பாக, தற்போதைய பாரத்தின் பிரதமர் மோடியை, வருகின்ற பிரதமர் வேட்பாளராக ஏற்று அங்கம் வகிப்பதாக தெரிவிக்கிறது. 


த.ம.கா கட்சி மூப்பனார் காலத்தில் தொடங்கப்பட்டத்தில் இருந்து தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், த.ம.காவின் கருத்துகளை ஆலோசனை நடத்தி மக்கள் நலன், இயக்க நலன், வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்று செயல்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு மக்கள் மீதும் உலகத் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்ட கட்சியுடன் அங்கம் வகிக்க இந்த முடிவை எடுத்துள்ளோம். 


மேலும், இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு, தமிழர்கள், இந்திய மக்கள், தமிழ் கலாச்சாரம் இதை விரும்பும் மத்திய அரசு, இதற்கு பல உதாரணங்களை கோடிட்டு காட்ட முடியும்.


இந்திய பொருளாதாரம், இந்திய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியம் கொண்டு, அதை கருத்தில் கொண்டு இந்த நல்ல முடிவை எடுத்துள்ளோம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலித்து கொண்டிருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு இந்த பணியை நாங்கள் தொடர்வோம். எஸ்சி, எஸ்டி பிரிவை சார்ந்த மக்களின் தேவைகளை எதிர்ப்பார்ப்பை வளர்ச்சியை மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நல்ல திட்டங்களை தொடர, புதிய திட்டங்கள் கிடைக்க செயல்படுத்த கூட்டணியில் நம்பிக்கை கொடுக்கக்கூடிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் இருக்கும்” என தெரிவித்தார்.