முத்தமிழறிஞர் கலைருக்கு, முத்தமிழ் மட்டுமல்ல, டைமிங், ரைமிங், யூமர்ஸ் சென்ஸ் என மூன்று வகையான ஜோக்குகளையும் சமயோஜிதமாக அடிப்பது அத்துப்படி, சகமனிதரிடம் பேசும் உரையாடல்கள் தொடங்கி மேடைப்பேச்சோ, பத்திரிக்கையாளர் சந்திப்போ எதிலும் ஏதோ ஒரு ரூபத்தில் அவரின் நகைச்சுவை நயமும், கேள்வி ஞானமும் வெளிப்படும். அதைக்கொண்டு அவர் செய்த சம்பவங்களின் தொகுப்பு இதோ... !

  


சம்பவம் - 1




தான் கதை, வசனம் எழுதிய பூமாலை படத்தில் பல சீன்களை சென்சார் அதிகாரிகள் நீக்கிய நிலையில், சென்சார் போர்டு அலுவலகத்திற்கு சென்ற கருணாநிதி, என்னை இப்படி மாடி படி ஏறவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே? என்று கேட்க, ’நீங்கள் நாத்திகவாதியா இருப்பதால பழனி, திருப்பதி எல்லாம் போகமாட்டிங்க, அதனாலதான் உங்கள இந்த படி ஏற வைக்குறன்னு’ கலைஞரை கலாய்க்க,  ’’அங்க போனாலும் மொட்டதான் அடிக்குறாங்க; இங்கயும் எனக்கு நீங்க மொட்டதான் அடிக்குறீங்கன்னு’’ பதில் கவுண்டர் கொடுத்தார். 


சம்பவம் - 2




புதுக்கட்சி தொடங்கி உள்ள எம்ஜிஆர் கூட்டத்தில்  பேசும்போது,  ’’கலைஞர் பொய்  சொல்கிறார் அவரை நம்பாதீர்கள் என்கிறார்’’;  நானோ ‘இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் பெண்கள் எல்லாரும் அழகானவர்கள் என்று சொல்கிறேன், இதைத்தான் எம்ஜிஆர் பொய் என்கிறார் என அவரது பாணியில் அழகாக திருப்பிட்டார் கலைஞர். 


சம்பவம் - 3




பெருமாள் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலைஞர் கருணாநிதி பேசுகையில், பெருமாள் படத்தினுடைய இரண்டு பாடல் காட்சிகளை இங்கே ஒளிபரப்பி காட்டினார்கள்; அதை பார்த்த போதுதான் பெருமாள் என்ற பெயர் இந்த படத்திற்கு மிகவும் பொருத்தம் ஏனென்றால் இப்படிப்பட்ட காட்சிகளைத்தான் அந்த காலத்திலேயே பெருமாள் விரும்பி இருக்கிறார் என நான் புராணங்களிலே படித்து இருக்கிறேன்; பழைய படங்களிலே பார்த்திருக்கிறேன். அதை மறவாமல் இந்த படத்திற்கு பெருமாள் என்று பெயர் இட்டு இருப்பது முற்றிலும் பொருத்தமானது. சென்சார் கட்டில் இருந்து தப்பி வருவதற்கு இந்த பெயர் மிகமிக வசதியானது என்பதை நான் நன்றாக அறிவேன். (மேடையில் சிரிப்பலை)


சம்பவம் - 4


தேர்தல் சமயத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலைஞர் அழைக்கப்பட்டிருந்தார். மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் அரசியல் கருத்துகளை பேச வேண்டாம் என கலைஞருக்கு கல்லூரி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் கலைஞர் பேசுகையில், மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது என சொன்னார்கள்; எனவே நான் இங்கு அரசியல் பேசப்போவதில்லை, இந்த நிகழ்ச்சி முடிந்த உடன் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ’’சாப்பிட்டு முடித்தவுடன் இலையை தூரவீசிவிட்டு; கையை தவறாமல் கழுவிவிடுங்கள்’’  (அந்த தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி) 


சம்பவம் - 5


“எனது பள்ளிக் காலத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் திருவாரூருக்கு அடிக்கடி காலட்சேபம் செய்ய வருவார். அவருடன் வாதிடுவதற்காகவே பள்ளிக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு அவரது கூட்டத்துக்குச் செல்வேன்.


ஒரு முறை வாரியார் கதா காலட்சேபத்தில் உயிருள்ள எதையும் மிருகமோ - பறவையோ மனிதன் கொன்று தின்பதற்கு கடவுள் படைக்கவில்லை என்றார். உடனே நான் சிங்கத்துக்குக் கடவுள் என்ன உணவு படைத்தார்? எனக் கேட்டபோது என்னை உட்காரச் சொல்லிவிட்டார். அதைத் தொடர்ந்து தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே அதைச் சாப்பிடலாமா? எனப் பல பேர் கேட்கலாம். காய்கறிகளைப் பறித்த பின்பும் அவற்றின் வளர்ச்சி தடைபடுவது இல்லை. எனவே மனிதன் தாராளமாய்ச் சாப்பிடலாம் என்றார். நானும் விடவில்லை. கீரைத் தண்டை வேரோடு பறித்துச் சாப்பிடுகிறோமே அது எப்படி? எனக் கேட்டேன். அப்போதும் வாரியார் என்னை அடக்கி உட்காரச் சொன்னார்.


வாரியார் சுவாமிகளை அதற்குப் பிறகும் பலமுறை சந்தித்திருக்கிறேன். நான் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை அவரிடம் இருந்து மட்டுமல்ல, வேறு எவரிடம் இருந்தும் பதில் வரவில்லை. அதனால் என் கொள்கையை நானும் மாற்றிக் கொள்ளவுமில்லை.”


சம்பவம் - 6


1985ஆம் ஆண்டில் ஆனந்த விகடனில் வந்த கவிதை ஒன்றில்,


விதவை என்று எழுதுகிறேன்..
எழுத்தில் கூட பொட்டு
வைக்க முடியவில்லை..
சமுதாயம் மட்டும் அல்ல‌
மொழியும் உங்களை
வஞ்சித்து விட்டது என எழுதப்பட்டு இருந்தது, இதற்கு பதில் எழுதிய கலைஞர் கருணாநிதி, "விதவை" என்பது வட‌மொழிச் சொல்; தமிழ்மொழியில் "கைம்பெண்" என்று எழுதினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம். தமிழ் வஞ்சிக்காது வாழ வைக்கும்” என்று தமிழையும் கணவனை இழந்த பெண்களையும் பெருமைப்படுத்தினார்.