உத்தரபிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்துக்கு சென்ற அசாதுதீன் ஒவைசியின் காரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய சட்டவிரோதமான 9mm பிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் 403 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இதற்கான முதற்கட்ட தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 58 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


இந்நிலையில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன. ஹைதராபாத் மக்களவை தொகுதியின் உறுப்பினரும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுகிறது.



உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய மஜ்லீஸ் முஸ்லிமின் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சி போட்டியிடுவதால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கணிசமாக பிரிந்து பாஜகவுக்கு சாதகமாகி விடும் என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், பாஜகவுக்கு மறைமுகமாக உதவி செய்வதற்காகவே ஓவைசியின் கட்சி உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போட்டியிடுவதாகவும், அக்கட்சி பாஜகவின் 'பீ' டீம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதனால் அசாசுதீன் ஒவைசிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் பல மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டு அவரது கட்சி சில தொகுதிகளை வென்றும் இருக்கிறது.


இதற்காக அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பில்குவா பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் கார் மூலம் டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். சஜர்சி சுங்கச்சாவடி பகுதியை அவருடைய கார் அடைந்ததும், மறைந்திருந்த மர்ம நபர்கள் ஒவைசி காரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அவரது காரை 5-க்கும் மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. எனினும், இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.






இது குறித்து லோக் சபாவில் கேள்வி எழுப்பிய அக்கட்சியின் இம்தியாஸ் ஜலீல், ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை) அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் என்று கூறியிருக்கிறார். கைது செய்யப்பட்டவரை விசாரித்ததில், ஒவைசி பேசிய இந்துத்துவத்திற்கு எதிரான கருத்துகளால்தான் இப்படி செய்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா மூலம் கிடைத்த தகவல்களின் படி இருவரை கைது செய்த போலீசார் மீதமுள்ளவர்களையும் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்த 9mm பிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.