உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்டார் கப்பல் இன்று விசாகப்பட்டினத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் முன்னிலையில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மிரட்டும் 'நிஸ்டார்'

இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனம் கட்டமைத்து தயாரிக்கும் இரண்டு ஆழ்கடல் தேடுதல் மற்றும் மீட்பு  கப்பல்களில் இது முதலாவதாகும். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய இணையமைச்சர், ஐஎன்எஸ் நிஸ்டார் செயல்பாட்டுக்கு வருவது, இந்திய கடற்படையின் வலிமையை உறுதியாக அதிகரித்துள்ளது என்று கூறினார். உள்நாட்டு கப்பல் தயாரிக்கும் தொழில், அரசின் தற்சார்புக்கு ஆதாரமாக உள்ளது என்றும், தற்போது, தயாரிக்கப்பட உள்ள 57 புதிய போர்க்கப்பல்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல்:

ஐஎன்எஸ் நிஸ்டாரின் வருகையை ஒரு தொழில்நுட்ப பாய்ச்சல் என்றும், எதிர்காலத் தயார்நிலைப் படையை உருவாக்குவதற்கான இந்திய கப்பல் தயாரிக்கும் அத்தியாயத்தில் ஒரு மைல்கல் என்றும் அவர் விவரித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, ஐஎன்எஸ் நிஸ்டாரை ஒரு தொழில்நுட்ப சொத்து எனக் குறிப்பிட்டார். ஐஎன்எஸ் நிஸ்டாரில் தொலைதூரத்தில் இயக்கப்படும் வாகனங்கள், சுயமாக இயக்கப்படும் ஹைப்பர்பேரிக் லைஃப் படகு, டைவிங் கம்ப்ரஷன் சேம்பர்கள் போன்ற அதிநவீன டைவிங் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

 

இந்தக் கப்பல் 300 மீட்டர் ஆழம் வரை டைவிங் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேற்பரப்புக்குக் கீழே உள்ள ஆபத்தில் உள்ள டைவ் செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பணியாளர்களை மீட்டு வெளியேற்றுவதற்கான ஆழமான நீரில் மூழ்கும் மீட்புக் கப்பலுக்கான 'தாய் கப்பலாக'வும் இது செயல்படும்.