அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் நாளை காலை அதிகாரபூர்வமாக ஆளும் திமுக கட்சியில் இணைகிறார்.  பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் 2021ல் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அமமுக விலிருந்து பழனியப்பன், மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறிய ஆர்.மகேந்திரன் , பத்மபிரியா என பல்வேறு கட்சிகளில் இருந்து ஏற்கெனவே தொடர்ச்சியாக உறுப்பினர்கள் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 


முன்னதாக 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக 2011 மற்றும் 2016 என இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலத்துக்கும் கட்சிக்கும் இதுதொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட பெருந்துறை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் அவர். இதையடுத்து கட்சி அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியது. சட்டமன்றத் தேர்தலில் வெறும் 5 சதவிகித வாக்குகள் பெற்று நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார் அவர்.இதையடுத்து அண்மையில் அவர் திமுகவில் இணைகிறார் என்கிற செய்தி அரசல்புரசலாக வெளிவந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ல் அவர் அதிமுகவின் வருவாய்த்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


திமுகவில் தொடர்ச்சியாகப் பல்வேறு கட்சிகளில் இருந்து வெளியேறிய முக்கிய நபர்கள் இணைந்து வருகின்றனர். அண்மையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் அமைச்சரான தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் இன்று தன்னை, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டார். அதிமுகவிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர் அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து அதிமுக-வுக்காக 2011 மற்றும் 2016 என இரண்டுமுறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழனியப்பன். 2013ல் அந்தக் கட்சியின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவர் திமுக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மற்றொரு பக்கம், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறிய அந்தக் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் அண்மையில் தன்னைத் திமுகவில் இணைத்துக்கொண்டார். மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவரும் அந்தக் கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளருமான ஆர்.மகேந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துகொண்டார்.  அவரோடு அவரது ஆதரவாளர்கள் 78 பேரும் தன்னை திமுகவில் இணைத்துகொண்டார். மதுரவாயல் தொகுதியில் மநீம சார்பில் போட்டியிட்டு பின்னர் கட்சியில் இருந்து விலகிய பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தார். கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் மகேந்திரன் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் அதனை மறுத்திருந்தார்.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கடந்த மே மாதம் அந்தக்கட்சியில் இருந்து விலகினார். அவர் விலகும்போது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இவரைத் தொடர்ந்து, அக்கட்சியில் பல முன்னணி நிர்வாகிகள் விலகினார்கள்.


இதனைத்தொடர்ந்து, மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. ஆனால், அதை அவர் மறுத்தார். அதன்பிறகுதான் அண்மையில் அதிகாரபூர்வமாக அவர் திமுகவில் இணைந்தார். மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த பலர் தங்களை தொடர்ச்சியாக திமுகவில் இணைத்துக்கொள்வது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


Also Read: திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்!