தான் பேச முடியாததை ஆதவ் அர்ஜுனாவை வைத்து பேசுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரை சந்தித்த திருமாவளவனிடம் நீங்கள் பேச முடியாததை ஆதவ் அர்ஜூனாவை வைத்து பேசுகிறீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய அவர், “முதல் முறையாக இதுபோன்ற கேள்வியை எதிர்கொள்கிறேன். வழக்கமாக ஆதவ் அர்ஜுனா என்னை இயக்குவதாகத்தான் கேள்வி கேட்பார்கள்.
ஆதவ் அர்ஜுனாவை வைத்து யாருக்கு பேச போகிறேன். ஒருவேளை முதல்வரிடம் என்று சொன்னால், அவரை நான் சந்திக்க முடியாதா? பேச முடியாதா? எதுவேண்டுமானாலும் நான் நேரடியாகவே அவரிடம் பேசுவேன்.
ஆதவ் அர்ஜுனா என்னிடம் கேட்டார். நீங்கள் போக விரும்பவில்லை. கலந்து கொள்ள முடியவில்லை. சரி இருக்கட்டும். நான் போகலாமா என்று கேட்டார்.
அவர் அந்த புத்தகத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார். அந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களில் அவரும் ஒருவர். அதனால் அவரை போக சொன்னேன். அரசியல் பேசாதீர்கள். அம்பேத்கரை பேசுங்கள் என்று சொன்னேன். ஆனால் அரசியல் பேசப்பட்டது. அதை நான் முன் கூட்டியே யூகித்தேன். அதனால்தான் நான் இந்த முடிவு எடுத்தேன்” எனத் தெரிவித்தார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பல அரசியல் நிகழ்வுகளை பேசி அதிரடி காட்டினார் விஜய். அதாவது, “200 தொகுதிகளை இறுமாப்புடன் வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சியால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என பல்வேறு விஷயங்களை பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.