சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ;
தமிழ்நாட்டிலும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் தலித்துகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிரான வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை சமூகத்தில் இஸ்லாமிய கிறிஸ்தவர்களை தாண்டி பௌத்த சமூகமும் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
மசூதிகள் தேவாலயங்களை இடிப்பதை போல புத்த விகாரங்களையும் சிலைகளையும் குறி வைத்து இடிப்பது போன்ற நடவடிக்கைகளில் சங்பரிவார் கும்பல் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றது. அண்மையில் ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர பொதுச் செயலாளர் சிவபிரசாத் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு மலையில் புத்தர் சிலையை பராமரித்து வருகிறார். பொதுமக்கள் அந்த இடத்திற்கு வந்து புத்தரை தரிசித்து வருகிறார்கள். அந்த சிலையின் தலையை துண்டித்து இருக்கிறார்கள் அதனை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சிவபிரசாத் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளை கொண்டு அவருக்கு துயரத்தை ஆந்திர மாநில அரசு செய்து வருகிறது.
ஆந்திர மாநிலம் - சங்கிகளின் பிரதேசம்
பாஜகவோடு அவர்கள் கைகோர்த்த பிறகு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை விட பிஜேபி தான் ஆட்சியை நடத்துகிறது என்று சொல்லுகிற அளவிற்கு காவல் துறை வருவாய்த்துறை அதிகாரிகள் சங்பரிவார்களின் தொண்டர்களாக மாறி வருகிறார்கள். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது ஆந்திர பிரதேசத்தை மெல்ல மெல்ல சங்கிகளின் பிரதேசமாக மாற்றி வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. சிவ பிரசாத் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு இடிக்கப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அங்கே நிறுவ வேண்டும். சிலை இருந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றி அரசு வேலி போட்டு அடைத்துள்ளது. அதனை பொதுமக்கள் பார்வையிடும் இடமாக மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். விஜயவாடாவில் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சில அரசியல் துணை வருத்தமளிக்கிறது
சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை பாஜக கைவிட வேண்டும். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் மிக மோசமான நடவடிக்கைகளில் ஆர் எஸ் எஸ் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் அவர்கள் காலூன்ற துடிக்கிறார்கள் தமிழகத்தையும் சனாதன மயப்படுத்த முயற்சிக்கிறார்கள் அதற்கு சில அரசியல் கட்சிகளும் சாதிய மதவாத அமைப்புகளும் துணை போகின்றது என்பது பெரும் கவலை அளிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி இங்குள்ள சில அரசியல் கட்சிகளோடும் சாதிய மதவாத அமைப்புகளோடும் இணைந்து செயல்பட தொடங்கிய பிறகு தான் சாமியின் பெயரால் வன்முறைகள் அதிகரித்துள்ளது ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை
நெல்லையில் கவின் செல்வ கணேஷ் மிகக் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் தனி ஒரு நபராக அந்த கொலையை செய்துள்ளாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் சம்பவ இடத்தில் உடன் இருந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. கவினின் பெற்றோரும் இந்த சந்தேகத்தை முன் வைக்கிறார்கள் எனவே தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வழக்கை மாற்றி இருந்தாலும் கூட சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் உயர் நீதிமன்ற கண்காணிப்பில் அந்த புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
பாஜக ஆர்வம் காட்டவில்லை
ஆணவ கொலைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. சாதி மதத்தின் பெயரால் ஆணவ கொலைகள் தேசிய அளவில் நடைபெற்று வருகிறது எனவே இந்திய ஒன்றிய அரசு ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்றுவது தான் மிகவும் சரியானது ஆனால் பாஜக அதில் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை கவின் ஆணவ கொலையை கண்டித்து பாஜக தரப்பில் யாரும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஆணவக் கொலைகளையும் ஜாதிப் பெருமைகளையும் பாஜக, ஆர் எஸ் எஸ் சங்பரிவார்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். சாதியவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சாதியின் பெயரால் வரும் வெறுப்பு அரசியலை ஊக்கப்படுத்த கூடாது. இந்திய ஒன்றிய அரசு ஆணவ கொலைகள் தலைப்புச் சட்டத்தை இயற்றும் என்று காத்திருக்காமல் தமிழ்நாட்டிற்கான ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்துகிறது.
பீகார் வாக்காளர் பட்டியல் கண்டனத்துக்குரியது
பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது கடும் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது. சிறப்பு தீவிர திருத்த பட்டியல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறோம் ஆனால் அதனை விவாதிப்பதற்கு கூட நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை தலைவர்கள் அனுமதிக்கவில்லை அதனை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கபட்டவர்கள் பெரும்பாலானோர் சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டமிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் மூலம் மோடி அரசு மேற்கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது. இது தமிழ்நாட்டிற்கான முன்னோட்டமாக மாறும் இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுவதாக தெரிகிறது.
அனைத்து கட்சி கூட்டம்
வட மாநிலத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 80 லட்சம் பேர் தொழிலாளிகளாகவும் , வியாபாரிகளாகவும் இங்கு குடி ஏறி இருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அவர்களை எல்லாம் இங்கே தமிழ்நாட்டின் வாக்காளர்களாக சேர்க்கும் முயற்சி பாஜக வின் செயல் திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான விவாதத்தை நடத்துவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.
ஆணவக் கொலைகளை கண்டித்து ஆகஸ்ட் 9-ம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சென்னையில் தனது தலைமையிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆணவ கொலைகள் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று திமுக தேர்தல் அறிகையில் கூறி இருக்கிறது எனவே அதனை நடைமுறை படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
ஆணவ கொலைகள் என்பது தேசிய அளவிலான பிரச்சனை எனவே இந்திய ஒன்றிய அரசு தான் ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை மாநில அரசுகள் எடுப்பதாக தெரிகிறது..மாநில அரசும் சட்டம் ஒழுங்கு என்ற அடிப்படையில் இந்த சட்டத்தை இயற்ற வேண்டும். போராட்டங்கள் வழியாக மக்களை திரட்டி அரசுக்கு இதனை வலியுறுத்துவோம்.
கவின் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது, குற்றவாளியின் பெற்றோர்கள் இருவரும் காவல் துறையை சார்ந்தவர்கள் சிபிசிஐடி காவல் துறையும் தமிழ்நாடு காவல்துறைக்கு உட்பட்டவர்கள் தான். எனவே முதல்வரை சந்தித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
இந்திய அளவில் தலித்துகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பவர்கள் மிக இலகுவாக ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். குற்றம் சூட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பது தீவிர படுத்தப்படவில்லை. சாதிய மதவாத அமைப்புகள் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே சாதிய உணர்வை ஊக்கப்படுத்தி தூண்டிவிடுகிறார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி தான்
திமுக கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதை கூட்டணி தலைவர் தான் முடிவு செய்வார். ஓபிஎஸ் தேமுதிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி தான். பாஜக பேசுகின்ற அரசியல் வெகுமக்கள் விரோத அரசியல் என்பதால் தான் அதனை எதிர்க்கிறோம் வேறு தனிப்பட்ட காரணங்கள் இல்லை.