TN Birth Rate: தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் சரிவதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை:
இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதோடு, அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த தொகுதியில் வசிக்கின்றனரோ, அங்கேயே வாக்களிக்க உரிமை உள்ளதாகவும் அரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 6.5 லட்சம் பீகார் மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படியே, தமிழ்நாட்டில் சுமார் 35 லட்சம் வடமாநில மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கை தற்போது கோடியை கடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ஒருவேளை அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டால், தமிழ்நாட்டில் அரசியல் களமே மாற்றம் காணும் என அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாநிலத்தவர்களின் கூடாரமாகும் தமிழ்நாடு?
ஒருபுறம் வடமாநில மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில் தான், பிறப்பு விகிதம் சரிந்து உள்ளூரி மக்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் கடும் வீழ்ச்சியை கண்டு வருகிறது. 2020ம் ஆண்டில் 9.25 லட்சம் குழந்தைகள் பிறந்த தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் 8.47 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். 2023ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் பிறப்பு விகிதம் 6.09 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதேகாலகட்டத்தில் வேலைவாய்ப்பிற்காக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் ஆகும். இதே சூழல் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ்நாடு என்பது வடமாநிலத்திவர்களின் கூடாரமாக மாறும் சூழலும் நிலவுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்மாநிலங்களுக்கும் இதே அச்சுறுத்தல் நிலவுகிறது.
தென் மாநிலங்களில் சரியும் பிறப்பு விகிதம்:
தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை அதே நிலையில் நீடிக்க பிறப்பு விகிதம் சராசரியாக 2.10 சதவிகிதமாக இருக்க வேண்டும். ஆனால், தேசிய அளவில் அது 1.9 சதவிகிதமாகவே உள்ளது. தென்மாநிலங்களின் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை காட்டிலும் மிகவும் குறைவாகவே உள்ளது.
- தமிழ்நாடு - 1.4
- ஆந்திரா - 1.5
- தெலங்கானா - 1.5
- கேரளா - 1.5
- கர்நாடகா - 1.5
வடமாநிலங்களில் உயரும் பிறப்பு விகிதம்:
அதேநேரம் வேலைவாய்ப்பு இன்றி தமிழ்நாட்டிற்கு அதிகளவில் புலம்பெயர்ந்து வரும் வடமாநிலத்தவளிடையே பிறப்பு விகிதம் என்பது தேசிய அளவை காட்டிலும் அதிகமாகவே உள்ளது.
- பீகார் - 3.1
- மத்திய பிரதேசம் - 2.9
- உத்தரபிரதேசம் - 2.7
- ராஜஸ்தான் - 2.4
பிறப்பு விகிதம் சரிய காரணம் என்ன?
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்பு அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளால் பிறப்பு விகிதம் கட்டுக்குள் கொணுவரப்பட்டது. ஆனால் இன்று பொருளாதார சூழல், கல்வி அறிவு, செலவு அதிகரித்து வரும் சூழல், வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. அதேநேரம், வடமாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு முறை ஆரம்பம் முதலே தீவிரமாக பின்பற்றப்படாததும், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதும் இன்றளவும் அதிகளவு மக்கள் தொகையை காண்பதற்கு காரணமாக உள்ளது. இதுபோக கல்வி மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பிரிவுகளில் இன்னும் பின்தங்கி இருப்பதும் அம்மாநில மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன.
உருவாகும் பிரச்னைகள்:
மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றே குடும்பக் கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால், அதை பின்பற்றாத வடமாநிலங்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம் பிறப்பு விகிதமும் குறைய, வடமாநில மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு இங்கேயே வாக்குரிமை அளிக்கவும் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அப்படி நடந்தால் நம்மை யார் ஆள வேண்டும் என்பதை கூட, வடமாநிலத்தவர்களே தீர்மானிக்கும் சூழல் உருவாகும். தேசிய நீரோட்டத்தில் முற்றிலுமாக இணையாமல், மாநில உரிமைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாலேயே, பல மாநிலங்களுக்கும் தமிழ்நாடு பல துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது. ஒருவேளை அந்த தனித்துவத்தை நாம் இழந்தால், ஒட்டுமொத்த அரசியல் சூழலுமே இங்கு மாறக்கூடும்.
இதுபோக முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆண்களின் மீதான பொருளாதார சுமைகள் அதிகரிப்பு உள்ளிட்ட வேறு சில பிரச்னைகளும் எழக்கூடும்.
தீர்வுகள் என்ன?
குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க பொது மேடைகள் வரை அனைத்து வகைகளிலும் அரசு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சரியான வயதில் திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவதை தவிர்த்தல், உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவை குறித்து இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை சேவைகளுக்கான செலவை குறைத்து, மக்களின் வாழ்க்கை தரத்தை அரசு மேம்படுத்த வேண்டும். போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தனிநபர் பொருளாதாரத்தை மேம்படுத்தன் மூலமும், குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தை பொதுமக்களிடையே அகற்ற முடியும். பிறப்பு விகிதம் அதிகரித்தால் மட்டுமே தொழிலாளர் துறை வலுப்பெற்று, வெளிமாநிலத்தவர்களின் ஆதரவை நாட வேண்டிய சூழலை தவிர்க்க முடியும்.