தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை மீண்டும் தக்க வைக்க திமுக- அதன் கூட்டணி கட்சிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது,
வெற்றி பெற வேண்டும்:
நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெற்ற வெற்றியைக் காட்டிலும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் பெறவிருக்கிற வெற்றிதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் 100க்கு 100 வெற்றி பெற்றாக வேண்டும்.
அதற்கு திமுக களப்பணியாளர்களுடன் ஈடுகொடுத்து, வீரியத்துடன் பணியாற்ற சிறுத்தைகள் தயாராக இருக்கிறோம். தருமபுரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் திமுக தோழர்களோடு, அவர்கள் பாய்கின்ற வேகத்தோடு இணையாக, ஈடாக விடுதலைச் சிறுத்தைகளும் களத்தில் இருப்போம். ஜெயிப்போம்.
மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும்:
மீண்டும் மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நாற்காலியில் அமர வைப்போம். அதன்மூலமாகத்தான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை நாம் நனவாக்கிட முடியும். இல்லாவிட்டால் நாம் பெரும் சவால்களைச் சந்திக்க நேரிடும்.
வலதுசாரிகளின் கைகள் ஓங்கும். அதற்கு அதிமுக போன்ற கட்சிகள் இன்று துணையாக இருக்கிறார்கள். அதிமுக பெரியார் பாசறையில் உருவான இயக்கம். ஆனால், இன்று பெரியாருக்கு நேர் எதிரான சக்திகளுடன் இணைந்து இருக்கிறார்கள். பெரியாரையே கொச்சைப்படுத்தும் சக்திகளுடன் கைகோர்த்து இருக்கிறார்கள்.
அதிமுக செய்யும் துரோகம்:
பெரியார் அரசியலையே தமிழ் மண்ணில் இருந்து துடைத்து எறிய வேண்டும் என்று எண்ணுகிற துடிக்கிற சக்தியுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். அது திராவிட அரசியலுக்கு எதிரானது என்பதைத் தெரிந்தும் செய்கிறார்கள். பெரியாருக்கும் அவருக்கும் மானசீக குரு தலைவருக்கும் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் செய்யும் துரோகம் என்பதை மறந்து செய்கிறார்கள்.
ஆனால், அவர்களிடம் இருந்தும் வலதுசாரி சக்திகளிடம் இருந்தும் பிற்போக்கு சக்திகளிடம் இருந்தும் இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால் திராவிட மாடல் எனப்படும் பெரியார் மாடல் அரசு, அண்ணா மாடல் அரசு, கலைஞர் (கருணாநிதி) நிறுவிய அரசு இந்த மண்ணில் தொடர வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உணர்ந்துள்ளது.
வலதுசாரிக்கு இடமில்லை:
அந்த அடிப்படையில்தான் நாம் மு.க.ஸ்டாலினுடன் கை கோர்த்து இருக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு விசிக கட்டியம் கூறுகிறோம். 234 தொகுதிகளிலும் நாம் மிகப்பெரிய வெற்றியைக் குவிக்க வேண்டும். மீண்டும் நமது கூட்டணிதான் வெற்றி பெறும் என்பதை நிரூபிக்க வேண்டும். இன்னும் சில மாதங்களே உள்ள யுத்தச் சூழலில் இப்போது முதல் நமது களப்பணிகளைத் தீவிரப்படுத்துவோம்.
வலதுசாரி அரசியலுக்கு நமது மண்ணில் இடமில்லை. பிற்போக்கு சக்திக்கு இந்த மண்ணில் இடமில்லை. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி இங்கே நம்மை வீழ்த்துவதற்கு நடக்கும் சதி முயற்சிக்கு இங்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு களம்தான் தேர்தல் களம் நம்மை நோக்கி வருகிறது. அதற்கு தயாராவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் முக்கியமான கட்சியாக உள்ளது. பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கு வங்கியை பெரும்பாலும் தங்கள் பக்கம் வைத்துள்ள விசிக, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிகளவு தொகுதிகளை ஒதுக்க திமுக-விடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் திமுக விசிகவிற்கு குறைந்த அளவே தொகுதிகள் ஒதுக்கும் என்று கருதப்படுகிறது.