தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் த.வெ.க பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மதியழகன் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சி.பி.ஐ அதிரடி விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசலில் பொதுமக்கள் உயிரிழந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள பல்வேறு நபர்களுக்கு சமன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அப்பகுதியில் சிறு கடைகள் நடத்தி வந்தவர்கள், உயிரிழந்த 41 குடும்பத்தினர், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் என 306 பேருக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பலரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய்யிடம் விசாரிக்க முடிவு ?
இந்தநிலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை விசாரிக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்திற்கு சென்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். கட்சி நிர்வாகிகளுடன் ஒரு புறம் விசாரணை செய்துவிட்ட பிறகு, கட்சித் தலைவர் விஜய்யும் விசாரிக்க முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தரப்பிலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் மனுவை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.