தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை தேர்தல் போட்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் களமிறங்கியிருப்பதால் தமிழக அரசியல் மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது.


மது ஒழிப்பு மாநாடு:


இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான விசிக காந்தி பிறந்த நாளில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த உள்ளது. இந்த மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே சர்ச்சைகள் மேல் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டது பெரும் பரபரப்பை தி.மு.க. கூட்டணிக்குள் ஏற்படுத்தியது.


கூட்டணியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தபோது இந்த சம்பவங்கள் அரங்கேறியது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து திரும்பினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று சந்திப்பு:


திருமாவளவனின் கருத்து கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை அவர் நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது மது ஒழிப்பு மாநாடு குறித்தும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கருத்தும் குறித்தும் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமாக பேச உள்ளார். இவர்களின் சந்திப்புக்கு பிறகு இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, இது குறித்து நிருபர்களுக்கு பதில் அளித்த திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு விவகாரம் குறித்தும், தனது கருத்து குறித்தும் தேர்தல் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்று கூறியிருந்தார், மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த திருமாவளவனின் கருத்துக்கு பதில் தெரிவித்த தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூட்டணி ஒப்பந்தத்தின்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று பேட்டி அளித்தார்.


அரசியலில் பரபரப்பு:


இந்த சூழலில், மதுவில் சிக்கிய வன்னிய இளைஞர்களையும், பட்டியலின இளைஞர்களையும் இணைந்து மீட்க வேண்டும் என்று அன்புமணி பேசியது திருமாவளவனுக்கு அவர் மறைமுகமாக அழைப்பு விடுப்பதாக அமைந்தது. இதுவும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், திருமாவளவன் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார்.