One Nation One Election: பாஜக தலைமையிலானா கூட்டணி அரசு, விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்:


நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு,  தற்போதைய ஆட்சிக் காலத்திலேயே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்தும் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. "நிச்சயமாக, இந்த பதவிக் காலத்திலேயே இது செயல்படுத்தப்படும். அது உண்மையாக இருக்கும்," என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. நியூஸ் 18 இன் செய்தியின்படி, அரசாங்கம் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கும் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு குறுகிய காலகட்டத்திலேயே ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 


பிரதமர் மோடி சொல்வது என்ன?


கடந்த சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முன்னுரிமையாக இருந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார். அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் பேசியிருந்தார். 


தேசத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய செங்கோட்டையில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்ததோடு, நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய மூவர்ணக் கொடியை சாட்சியாக வைக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். தேசிய வளங்கள் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்படுவதை கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கனவை நனவாக்க முன்வர வேண்டும் என்றார்.  


கமிட்டி சொல்வது என்ன? 


மத்திய அரசால் அமைக்கப்பட்ட, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தனது ஆய்வறிக்கயை சமர்பித்துள்ளது. அதில், முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.,வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.


லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் நகராட்சிகள் & பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய, மூன்று அடுக்கு அரசாங்கங்களுக்கும் 2029 ஆம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு அவை அல்லது நம்பிக்கையில்லா வழக்குகளில் கூட்டணி ஆட்சி அமைக்கவும் சட்ட ஆணையம் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான எந்த காலத்தையும் குறிப்பிடவில்லை. குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக 'செயல்படுத்தும் குழு' ஒன்றை உருவாக்க முன்மொழிந்துள்ளது