ராகுல் காந்தியை நாட்டின் நம்பர் 1 பயங்கரவாதி என்றும் அவர் இந்தியரே இல்லை என்றும் மத்திய அமைச்சரும் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களில் ஒருவருமான ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"ராகுல் காந்தி இந்தியரே கிடையாது"
அமெரிக்காவுக்கு சமீபத்தில் சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீக்கியர்கள் பற்றி தெரிவித்த கருத்துக்கு மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு எதிர்வினையாற்றியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னதாக, அவர்கள் முஸ்லிம்களைப் பயன்படுத்த முயன்றனர்.
ஆனால், அது நடக்கவில்லை. இப்போது அவர்கள் சீக்கியர்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். ராகுல் காந்தி இப்படி பேசுவதற்கு முன்பே நாட்டில் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் இதுபோன்று பேசியுள்ளனர். தீவிரவாதிகளாக இருப்பவர்களும் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்டவர்கள் ராகுல் காந்தியை ஆதரிக்கும் போது, அவர்தான் நாட்டின் நம்பர் 1 பயங்கரவாதி. என்னை பொறுத்தவரை, நாட்டின் மிகப்பெரிய எதிரியைப் பிடித்து அதற்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்றால் அது ராகுல் காந்திதான்.
சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்:
ஓபிசி மற்றும் சாதிகள் பற்றி அவர் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் செருப்புத் தொழிலாளியோ, தச்சரோ, மெக்கானிக்கோ ஆகியோரின் வலியை இதுவரை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் சுற்றித் திரிந்து அவர்களின் பிரச்சனைகளைக் கேட்கிறீர்கள். புகைப்படம் எடுத்து கொள்வதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கிறார். அவர் ஒரு ஜோக்" என்றார்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீக்கியர்கள் குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியலில் புயலை கிளப்பியது. "சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா? சீக்கியர் புனித கடா (bracelet) அணிய அனுமதிக்கப்படுவாரா?
குருத்வாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்குதான் இந்தியாவில் சண்டை நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மதத்தினருக்கும்தான். பெரும்பாலான நேரத்தை ராகுல் காந்தி இந்தியாவிற்கு வெளியே செலவிடுகிறார். எனவே, அவர் இந்தியரே அல்ல.
அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அங்கேயேதான் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் தனது நாட்டை அதிகம் நேசிப்பதில்லை என்று நினைக்கிறேன். வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான விஷயங்களைச் சொல்கிறார்" என ராகுல் காந்தி பேசியிருந்தார்.