சேலத்தில் விசிக மது மற்றும் போதை பொருள்கள் ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கான மேற்கு மண்டல நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியது, "எல்லா நேரங்களிலும் வாக்கு அரசியலில் கவனம் செலுத்தக் கூடாது. 2026 தேர்தலுக்கு 18 இன்னும் கால அவகாசம் இருக்கும்போது முன்னாடியே இதுபோல சூட்டை கிளப்பி, விசிக-வை அந்த கூட்டணியில் இருந்து வெளியேற்ற நினைக்கிறார்கள். நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். நான் அந்த அழைப்பு விடுத்ததில் எந்த தவறும், உள்நோக்கமும் இல்லை. ஏதேச்சையாக சொல்லி விட்டோம் என்பது இல்லை.


அரசியல் முதிர்ச்சி இருப்பதால்தான் அந்த வார்த்தை வருகிறது. மது ஒழிப்பு எனும் பொது நோக்கத்திற்காக அனைவரும் ஒன்றிணைவதில் என்ன தவறு. கள்ளக்குறிச்சி சாவு, உடனடி காரணமாக இருப்பதால் மது ஒழிப்பு மாநாட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டோம். உடனடியாக மதுக்கடைகளை மூடுவார்கள் என நினைக்க வில்லை. காந்தி இயக்கம், பெரியார் இயக்கம் எப்படி தொடர் பரப்புரைகளாக மேற்கொண்டார்களோ, அப்படி விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் மது ஒழிப்பிற்காக தொடர் பரப்புரை மேற்கொள்ளும்" என்றார்.



மூன்று மாதம் மட்டுமே தேர்தல் அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். மற்ற நேரங்களில் சமூக அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது இதில் சாதிக்க முடியுமா என நினைத்தால் மக்களோடு இருந்து மக்கள் உணர்வுகளை பிரதிபலித்தால் மக்கள் நம்மை நிச்சயம் கைவிட மாட்டார்கள்.


நான்தான் ரவுடி, நான்தான் ரவுடி என வடிவேல் நகைச்சுவையில் சொல்வது போல, நான்தான் அடுத்த முதலமைச்சர், அடுத்த முதலமைச்சர் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம்முடைய களமும் செயலும்தான் நம்மை அந்த இடத்திற்கு கொண்டு நிறுத்தும். பொதுமக்களே பேசுவார்கள்.


திருமாவளவன் ஏன் வரக்கூடாது என உழைக்கிற மக்கள், வாக்காளர்கள் சொல்லட்டும். அதற்கு ஊடகத்தையோ மற்றவர்களையோ நம்பி இருக்க கூடாது. மக்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை பேசுவதுதான் பயன்படும் என்றார்.



"சில நாட்களாக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் இயக்கித்தான் திருமாவளவன் பேசுகிறார் என திரிக்கிறார்கள். திருமாவளவன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க யாருக்கும் தகுதி இல்லை. என்னை இயக்கும் இயக்குநர்கள் இங்கு யாரும் இல்லை. அவர் நல்லெண்ணத்தோடு வந்து விசிகவில் இணைந்திருக்கிறார். வேறு எந்த கட்சியிலும் அவர் சேர்ந்திருக்கலாம். ஆனால் நம்முடைய கட்சிக்கு வந்துள்ளார். அம்பேத்கர் மற்றும் காந்தி இருவரையும் அவர் மதித்து வந்துள்ளார். தலித் அல்லாத எந்த அரசியல் கட்சித் தலைவர் வீட்டிலும் அம்பேத்கர் படம் இல்லை.


மருத்துவர் ராமதாஸ் அம்பேத்கர் மீது பற்றுள்ளவர். அம்பேத்கர் கருத்துக்களை சொல்லியவர் என்பதில் எங்களுக்கு மறுப்பில்லை. இட ஒதுக்கீட்டிற்காக பாடுபட்டவர், கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு தலித்தை நியமிக்கும் அவருடைய நிலைப்பாட்டை பாராட்டினோம். அம்பேத்கர் சுடர் விருதினை வழங்கி அங்கீகரித்தோம். ஆனால் திருமாவளவனை எந்த விதத்தில் நீங்கள் அங்கீகரித்தீர்கள். நாடக காதலை ஊக்குவிக்கிறார் என அவதூறு பரப்பினார்கள். பெரியார் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தை உருவாக்கினார்.


பெரியார் பெயரைச் சொன்ன மருத்துவர் ராமதாஸ் தலித் அல்லாதார் இயக்கத்தை உருவாக்கினார். தமிழ்நாட்டில் தலித் அல்லாத அரசியலை, தலித் வெறுப்பை விதைத்தவர் டாக்டர் ராமதாஸ். அவரின் நோக்கம் ஆபத்தானதாக இருப்பதை காலம் கடந்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம்" என்று பேசினார்.