தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த சொற்பொழிவில் பேச்சாளர்களாக திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், திராவிடர் கழகத்தின் துணை பொது செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, கெனித்ராஜ் அன்பு, உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.  


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றினார். 


விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது ;  


விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் , ஏன் தந்தை பெரியார் நினைவு கருத்தரங்கத்தை நடத்துகிறார்கள் என உங்களுக்கு கேள்வி இருக்கலாம் வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு விடாமுயற்சி துவண்டு போகாத மன உறுதி பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிக மிக அவசியம்.


தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படை குணங்களாக இருந்தன. பெரியார் மரணத்தின் போது பெரியார் தன் சுற்றுப்பயணத்தை தான் முடித்துக் கொண்டிருக்கிறார் நாம் தொடர்வோம் என்று கலைஞர் எழுதினார்.


பெரியார்  உடலால் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் அழியாது. 95 வரை வாழ்ந்த பெரியார் இறுதி வரைக்கும் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக உழைத்தவர் பகுத்தறிவு சமூகநீதி சுயமரியாதை கொள்கைகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தார்கள் அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.


இங்கு ஏராளமான மாணவர்கள் அமர்ந்துள்ளீர்கள் ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் தான் படிக்க வேண்டும் மற்றவர்கள் குலத் தொழிலை செய்ய வேண்டும் அவர்களெல்லாம் படித்தாலே தீட்டு என்று சொன்னார்கள் குறிப்பாக மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பொது இடத்தில் சிரித்தால் கூட தப்பு என்று கூறினார்கள் இன்றைக்கு அந்த நிலைமை மாறியுள்ளது எல்லோரும் படிக்கிறார்கள் எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள் யார் இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது என எண்ணிப் பார்த்தால் அது தந்தை பெரியாராக தான் இருக்கும்.


பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் செயல் வடிவம் கொடுத்தது பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான திமு கழக அரசு தான் இன்றைக்கும் அந்த பணியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எல்லோருக்கும் சம வாய்ப்பு வேண்டும் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உரிமைகள் வேண்டும் என்ற பெரியாரின் பிறந்த நாளை நம் முதலமைச்சர் சமூக நீதி நாளாக அறிவித்தார். சுயமரியாதை திருமணம் செல்லும் என அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிர் குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார் காவல்துறை ராணுவத்தில் பெண்கள் வரவேண்டும் என பெரியார் சொன்னார்.


இந்தியாவிலேயே முதல் முறையாக 50 வருடத்திற்கு முன்னாடியே தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் தான். இன்றைக்கு பெண்கள் உயர் கல்வி படிக்கவும் என்ற எண்ணத்தோடு புதுமைப்பெண் திட்டத்தை நம் முதலமைச்சர் தந்துள்ளார்.


உங்களில் பல பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வருகிறது வறுமை காரணமாக  கல்வியை விட்டு விடக்கூடாது என தமிழ் புதல்வன் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்று பெரியார் போராடினார் அதற்கு செயல்படவும் கொடுக்கிற விதமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தான் மகளிர் சுய உதவி குழுக்களை கலைஞர் தொடங்கினார்.


மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திட நம்முடைய முதலமைச்சர்  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்தார் எல்லோருக்கும் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று பெரியாரின் கனவை நினைவாக நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதி மாதிரியான உயர் பதவிகளுக்கு ஏழை எளிய கிராம பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வரவேண்டும் என வாழ்நாள் முழுக்க போராடியவர் தந்தை பெரியார் அதனை செயல்படுத்தும் விதமாக நம்முடைய முதலமைச்சர்.


யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகிற மாணவர்கள் இளைஞர்களுக்கு மாதம் 7,500 நிதி உதவி வழங்குகிறார்கள் அது மட்டுமல்லாமல் முதல் நிலை தேர்வில் வென்றால் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை கொடுக்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற நிலையை ஏற்படுத்திய பெரியார் இறுதிவரை போராடினார் அது முடியாமல் போன போது  பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஏன் பெண்களும் அர்ச்சராக பணியாற்றலாம் என்கிற நிலையை நாம் முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்தினார்கள்.


பெரியார் இல்லாமல் நாம் யாரும் இல்லை என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் என்னை எத்தனையோ பெயர்களை சொல்லி புகழ்ந்தாலும் பெரியார் வழியை பின்பற்றும் மானமிகு சுயமரியாதை காரன் என்று சொல்லும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார் கலைஞர். பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைக்கு சமகாலத்தில் ஒத்துப் போகும் அளவிற்கு உள்ளது அது என்றைக்கும் இருக்கும் ஆகவே தான் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ;


துணை முதலமைச்சர் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். அனைத்து அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணை முதலமைச்சர் ஆக தான் இருக்கிறோம். நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்ததாக இருக்கட்டும், அதேபோல் தொண்டர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியது நல்ல விஷயம். யாராக இருந்தாலும், பெரியாரை தொடாமலும், அவரை மீறியும் இங்கு அரசியல் செய்ய முடியாது. பெரியாருக்கு மரியாதை செலுத்திய நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.