விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநில மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு – சர்ச்சைகளான கருத்துகள்
மது ஒழிப்பு மாநாடு என்று திருமாவளவன் அறிவித்ததும் அதில் அதிமுக உள்ளிட்ட மது ஒழிப்பிற்கு ஆதரவான இயக்கங்கள் பங்கேற்கலாம் என்று அவர் கோரிக்கை விடுத்ததும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அதனைத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. ஒரு கட்டத்தில் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியே செல்லப் போகிறார் என்ற அளவிற்கு அவரது மது ஒழிப்பு மாநாட்டு அறிவிப்பும் அதனை தொடர்ந்து அவர் பேசிய கருத்துகளும் இந்த விவாதத்திற்கு அச்சிட்டன.
ஆனால், வெளிநாட்டில் இருந்து திரும்பிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் சலசலப்பும் இல்லை என்று திருமா பேட்டி அளித்த பிறகு அந்த சர்ச்சைகள் ஓயத் தொடங்கின.
ஆதவ் அர்ஜுனா கொளுத்திய நெருப்பு
பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, விசிக இன்றி வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்பது போன்றும் அவர் அந்த நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துகள் மீண்டும் திமுகவிற்கு நெருக்கடியை கொடுத்தன. அந்த கருத்திற்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்டோர் உடன்படவில்லை என்று பேட்டி அளித்த நிலையில், விசிகவில் ஒற்றுமையா இல்லையா ? என்ற கேள்வியும் இது குறித்து திருமா ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என்ற சந்தேகமும் பத்திரிகையாளர் மத்தியிலேயே எழுந்தது.
ஆனால், காஞ்சிபுரத்தில் திமுக நடத்திய பவளவிழா மாநாட்டி பங்கேற்ற திருமாவளவன் இந்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, திக, திமுக என்கிற இரட்டை குழல் துப்பாக்கியின் மூன்றாவது குழலாக திமுக எப்போதும் இருக்கும் என்று பேசி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மது ஒழிப்பு மாநாடு – கூட்டணி கூட்டமாக மாறியதா?
இந்நிலையில், திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக, விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று பெரிதாக பேசப்பட்ட்டு வந்த நிலையில், அந்த மாநாட்டிற்கு அவர்கள் யாரும் இன்று செல்லவில்லை. திமுக கூட்டணி கட்சியினர் மட்டுமே இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
தொடக்கதில் பெரிதாக பார்க்கப்பட்ட மாநாடு, திமுக தனது சார்பில் பிரதிநிதிகளை அனுப்புவதாக சொன்னதுமே அதிமுக அந்த மாநாட்டில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது. இப்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பில் அதிமுக, விஜய் என யாரும் பங்கேற்கவில்லை.
யார் யார் பங்கேற்பு ?
தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கொள்கை முழக்கத்தோடு இன்று நடைபெறும் மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தவிர்த்து, திமுக சார்பில் அந்த கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா, காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுதா, மதிமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் ரொஹையா ஷேக் முகமது, , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பாத்திமா முசபர், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்களோடு, அய்ய வைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பால பிரஜாபதி அடிகளாரும் பங்கேற்கிறார்.
முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை
மாநாட்டில் திமுக கூட்டணியின் முக்கிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனாலும், இந்த முக்கியத்துவமான மது ஒழிப்பு தொடர்பாக கருத்துரை பேச திருமாவளவன் தேர்ந்தெடுத்திருக்கும் பிற கட்சிகளை சார்ந்த 8 பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது