Haryana Assembly Election 2024: ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து, வரும் அக்டோபர் 8ஆம் தேதி, ஹரியானா தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
தீவிர நிலையில் பரப்புரை:
இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அங்கு ஆளும் கட்சியாக பாஜக தலைமையிலான அரசு பொறுப்பு வகிக்கிறது. இருப்பினும் இந்த முறை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதால், ஹரியானா தேர்தலானது பாஜகவுக்கு சற்று சவாலானதாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை ஹரியானா மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலும் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது.
இந்த தருணத்தில் ஹரியானா மாநிலத்தில் பஹதுர்கரில் நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றியதாவது “ பணக்காரர்களான அதானி - அம்பானி செலுத்தும் , அதே ஜி.எஸ்.டி வரியை ஏழை விவசாயிகளும் செலுத்துகின்றனர்.ஆனால் , கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி , ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார். இந்தியாவில் அனைத்து குடிமக்களும் சமம் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது
உங்களுடைய பணம்:
அம்பானி குடும்பத்தின் திருமணத்தை பார்த்தீர்களா, திருமணத்தில் செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் யாருடையது? உங்களுடைய பணம்.
உங்கள் குடும்ப திருமணத்திற்கு வங்கியிடம் கடன் வாங்கும் நிலையில், நாட்டின் 25 பேரின் வீட்டு திருமணத்திற்கு கோடிக்கணக்கான செலவு செய்யப்படும் கட்டமைப்பை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். . இது அரசியலைமைப்பு மீதான தாக்குதல் இல்லையா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மேலும் , நான் சித்தாந்தத்தை வைத்துதான் போராடுகிறேன், மோடியையோ , பாஜகவையோ வெறுக்கவில்லை என தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.