சேலத்தில் விசிக மது மற்றும் போதை பொருள்கள் ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கான மேற்கு மண்டல நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியது, "தமிழகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு ஏற்படுத்தியிருக்கிறது. மது ஒழிப்பின் தேவை குறித்த உரையாடல் விரிவாக அனைத்து தளங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். ஒவ்வொரு மாநாடும் அந்தந்த காலச்சூழலுக்கேற்ப பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி நடைபெற்றிருக்கிறது. வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். தமிழக அரசியல் வரலாற்றில் கருத்தியல் சார்ந்த, தேச நலன் சார்ந்த, அறிவார்ந்தவர்களால் வியந்து பாராட்டப்பட்ட மாநாடு இதற்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற அளவிற்கு நடந்தது என்றார்.


ஊடகங்கள் பெரிய அளவில் விடுதலை சிறுத்தைகள் செய்திகளை போடுவதில்லை. சமூக ஊடகங்கள் வந்த பிறகுதான் விடுதலை சிறுத்தைகள் குறித்த செய்திகள் உலகம் முழுக்க சென்று சேர்ந்தது. பெரிய ஊடக ஆதரவு எல்லாம் இருந்ததில்லை. ஊடக இருட்டடிப்புகளைத் தாண்டிதான் விசிக தாக்கு பிடித்துள்ளது. ஊடகங்களின் எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி, தவிர்க்க முடியாத சக்தியாக விசிக வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அமையும் என்று கூறினார்.



திருமாவளவனுக்கு திடீர் என்று என்ன ஞானோதயம் வந்துவிட்டது என சிலர் கேட்கிறார்கள். இப்போதுதான் அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள். 2005-லேயே மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தியிருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு வரலாறு உண்டு. மாநாட்டு தீர்மானங்களை படித்தால் விடுதலை சிறுத்தைகளை விமர்சிப்பவர்கள் படித்து பார்த்தால் எங்களைப் பற்றிய தெளிவு கிடைக்கும். ஈழம் குறித்து சர்வதேசிய பார்வையோடு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஈழத் தமிழரகளுக்கு எங்கள் அளவிற்கு மாநாட்டை நடத்தி தீர்மானம் நிறைவேற்றியதில்லை. ஒவ்வொரு தீர்மானமும் தீர்க்கமான பார்வையக் கொண்ட தீர்மானம். நம்மை சராசரியான சாதியவாதியாக பார்க்கிறார்கள். விவரம் இல்லாமல் ஒரு கும்பல் கூச்சல் போடுவதாக விமர்சிக்கிறார்கள். 4 பேர் எம்எல்ஏ ஆவதற்காக, சிலர் எம்.பி ஆவதற்காக திமுகவிடமும், அதிமுகவிடமும் கெஞ்சி கிடக்கிறார்கள் என குறைத்து மதிப்பிடுகிறார்கள். உங்களால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு மதிப்பு வாய்ந்த கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று கூறினார்.


பொது மேடை போட்டு விடுதலை சிறுத்தைகளோடு விவாதிப்பதற்கு யார் தயார் என கேட்க விரும்புகிறேன். கருத்தியல் சார்ந்த விவாதத்தை நடத்த எத்தனை பேருக்கு திராணி இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது போல நாங்கள் சராசரியான கட்சி இல்லை. வெறும் அதிகார வேட்கை கொண்ட இயக்கம் இல்லை. சமூக மாற்றத்தை நோக்கி சமத்துவ இலக்கை நோக்கி பயணிக்கிற போராளிகளை கொண்ட இயக்கம். காலம் எங்களை காட்டும். அதனால்தான் தாக்குபிடித்து நிற்கிறோம். எவ்வளவு அவமானங்கள், எதிர்ப்புகள் எல்லாம் தாண்டி எந்த பின்புலமும் தாண்டி 25 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் உரு திரண்டு நிற்கிறது என்று சொன்னால் எங்களின் உள்ளடக்கமே காரணம். நாங்கள் வெறும் சாதிப் பெருமையை சொல்லி மக்களை திரட்டவில்லை. ஆண்ட பரம்பரை என்று சொல்லி பீற்றிக் கொண்டு மக்களை திரட்டவில்லை.


திரும்ப திரும்ப சில அரைவேக்காடுகள் விடுதலை சிறுத்தைகளை சாதிக் கட்சி என்கிறார்கள். சாதி மறுப்பே மக்களின் விடுதலை என்பதில் நாங்கள் கொள்கையாக வைத்திருக்கிறாம் . விளிம்புநிலை மக்களுக்கான அரசியலை உரக்க பேசும் இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. சந்தர்ப்பவாத அடிப்படையில், சாதிய பெருமிதத்தின் அடிப்படையில், மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயமாக மாற்றும் சராசரியான அரசியல்வாதிகளாக இருப்போர், அவர்களைப் போல நம்மையும் நினைக்கிறார்கள். அதைப்பற்றி பொருட்படுத்தத் தேவையில்லை என்றார்.


மது ஒழிப்பு குறித்து திருமண விழாக்கள், காதணி விழாக்களில் கூட தொடர்ந்து பேசி வருகிறோம். எங்களின் குரல்கள் உங்களின் செவிகளில் விழாததற்கு நாங்கள் பொறுப்பல்ல. மேலவளவு படுகொலை நடப்பதற்கு உள்ளாட்சித் தேர்தல் உடனடிக் காரணமாக இருந்தது. பொதுவெளியில் ஏற்படும் மோதல் சாதிச் சண்டையாக மாறுவது உடனடிக் காரணாக உள்ளது. சாதி அடிப்படையில் சமூகம் பிளவுண்டு கிடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுஒழிப்பு பேச கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த சாராய மரணங்களே உடனடி காரணம். மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அதை ஒழிக்க முடியாது என்பது சிலரின் வாதம். ஆனால் சாதியை ஒழிக்க முடியாது என்பதால் அதை விட்டு விட முடியாது. திருட்டை ஒழிக்க முடியாது என்பதால் அதை விட்டு விட முடியாது. ஒழிப்பதற்கான தேவை ஏற்படுகிறது. அதற்கான கட்டமைப்பு தேவைப்படுகிறது.


மதுப்பழக்கம் மக்களிடையே இருக்கிறது. எனவே மதுவை ஒழிக்க முடியாது. 1954-ல் அகில இந்திய அளவில் மதுவிலக்கு ஆலோசனைக் குழு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது. அப்போது ஒருவர், கடுமையான உடல் உழைப்பு உள்ளவர்கள் குடிக்காமல் வேலை செய்ய முடியாது என்பதால் மதுவை ஒழிக்க முடியாது என்று கூறினார். எளிய மக்கள்தான் குடிக்கிறார்கள், மது குடித்து குடி நோயாளிகளாக மாறுகிறார்கள் என நினைப்பவர்கள் மதுவை ஒழிக்க முடியாது என சிலர் கூறுகிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. கடைசிக்கும் கடைசியாக இருக்கும் மனிதருக்கும் ஜனநாயகம் என்பதை வலியுறுத்தும் உணர்வு விடுதலை சிறுத்தைகளுக்கு உள்ளது. இந்த கோரிக்கையை விடுதலை சிறுத்தைகளால் மட்டுமே பேச முடியும்.


 


கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த சாவு, எல்லோரையும் போய்விட்டு வந்துவிடவில்லை. ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து, அவர்கள் வடித்த கண்ணீரைக் கேட்டு நெக்குறுதி, நெஞ்சுருகியே நச்சு சாராயத்தை எதிர்த்து போராட்டம் சென்னையில் நடைபெற்றது. இதனால் ஆளும் கட்சியுடன் முரண் எழும் எனத் தெரிந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் முக்கியம் என கருதியே போராட்டம் நடைபெற்றது. இதில் எங்களுக்கு எந்த சமரசமும் இல்லை.


திமுக ஆட்சியின் 3 ஆண்டுகாலத்தில் விசிக நிறைய போராட்டங்களை மக்களுக்கு நடத்தியுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டணியில் நீடிப்பது தேசிய அளவில் எடுத்த பெரிய முடிவு. மிகப் பெரிய முடிவினை எடுக்கும்போது அதனால் நடக்கும் நல்லது கெட்டது மற்றும் அடுத்த 10 ஆண்டுகளில் என்ன நடக்கும் என நினைத்துபார்த்து எடுக்கும் முடிவுகள். காவல்துறையைக் கண்டித்து நாமக்கல், ஒசூர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியிருக்கிறோம். தோழமைக் கட்சி ஒருங்கிணைந்த போராட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறோம். ஆனால் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் இருந்தால் பேசக்கூடாது என்பது விசிகவின் பார்வை இல்லை.


மக்கள் நலனா, கட்சியின் நலனா என்று பார்த்தால் மக்கள் நலனை முன்னிறுத்தியே விசிக செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவங்களுக்கப் பிறகே மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதை நமது கொள்கை பகைவர்கள் ஒரு சாக்காக பயன்படுத்திக் கொள்வார்கள் எனத் தெரியும். இதை பயன்படுத்தி திமுகவிற்கும் விசிகவிற்கும் ஒரு விரிசலை ஏற்படுத்துவார்கள் எனத் தெரியும். ஆனால் அதற்காக மாநாட்டை நடத்தாமல் இருக்கமுடியாது. ஒரு கட்சியின் குரலாக இல்லாமல், ஒட்டுமொத்த மக்களின் குரலாக மாநாடு நடக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இதைக் கருத்தில் கொண்டே கடந்த 10ம் தேதி ஒரு பொது அழைப்பு விடுத்தேன். இதைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் முதிர்ச்சி தேவை. பொது அழைப்பு எல்லோருக்குமானது. தமிழ்நாட்டு அரசியல் எப்படி பிளவு பட்டு கிடக்கிறது என்றால் அதிமுக கூட்டணியில் இருந்தால் திமுக கூட்டணி கட்சிகளிடம் பேசக்கூடாது அவர்களை பார்க்க கூடாது, சிரிக்க கூடாது, ஜெயலலிதா இருந்தவரை போட்டோ எடுக்க கூடாது என்று அதிமுகவினர் இருந்தனர். இந்த கலாசாரம் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கிறது. எந்த கூட்டணியில் இருந்தாலும் நண்பர்களாக கைகுலுக்கி கொள்ளலாம் என்கிற முதிர்ச்சி கலாசாரம் தமிழ்நாடு அரசியலில் இல்லை. அதுதான் பிரச்சினை. பொது அழைப்பு இல்லை.



ஏற்கனவே இங்கு ஊறிக்கிடக்கிற மோசமான கலாசாரமே இதற்கு காரணம். திமுக கூட்டணியில் இருந்து மற்ற கட்சிகளிடம் பேசக் கூடாது என நினைக்கிறார்கள். மிக மோசமான ஆபத்தை, மனிதவளத்திற்கு எதிரான என்பதால் மது ஒழிப்பிற்கு எதிரானதாக பொது மேடையில் பேச வேண்டும் என்று நினைத்தே பொது அழைப்பு விடுக்கப்பட்டது. எல்லா கட்சிகளுக்கும் மதுவிலக்கில் விருப்பம் இருக்கும்போது ஏன் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன என்பது குறித்து விவாதிக்க யாரும் முன்வரவில்லை. எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்போம். ஆனால் ஒட்டுமொத்தமாக அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு, திமுக கூட்டணி டமால், திருமாவளவனுக்கு ஏதோ திட்டம் இருக்கிறது என அவர்களாகவே ஒரு ஹைப் ஏற்படுத்தி விட்டார்கள். மீடியா ஹைப் காரணமாக, அவர்களின் கற்பனைக்கேற்ப செய்தி போட்டு விட்டார்கள். அனைத்து தரப்பினரும் சேர்ந்து செயல்படுவதற்கான அரசியல் முதிர்ச்சி இங்கு குறைவாக இருக்கிறது என்று வேதனையுடன் கூறினான்.