அதிமுக இல்லை என்றால் பாமகவிற்கு அரசியலில் அங்கீகாரமே கிடைத்திருக்காது என  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக, அண்மையில் நடந்த கட்சி கூட்டத்தில், அதிமுக நான்காக உடைந்து இருப்பதாக  அன்புமணி ராமதாஸ்  விமர்சித்து இருந்த நிலையில் அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.


செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், 


”அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது. ஜெயலலிதா கூட்டணி வைத்த பின்னர் தான் பாமகவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கு முன்பு பாமகவிற்கு அங்கீகாரமே கிடையாது. 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக  ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாமகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதை அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும்.


1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவிற்கு 5 சீட்டு கொடுக்கப்பட்டது. அதில் நான்கு இடத்தில்  அதிமுகவின் தயவால், பாமக வெற்றி பெற்றார்கள். நான்கு இடத்தில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால் பாமகவிற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் மறந்து விட்டு நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல,பாமக தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.


2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவிற்கு 27 இடங்களில்  சீட்டு கொடுக்கப்பட்டது, அதில் 20 இடங்களில் பாமக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிமுக தயவால் மட்டுமே பாமகவினர் வெற்றி பெற்றீர்கள். அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பாமகவினர் உள்ளே சென்றீர்கள். உங்கள் கட்சி நிகழ்வில் உங்கள் தொண்டர்களை மகிழ்விக்க நீங்கள், “பாமக தான் இனி அடுத்த ஆளும் கட்சி” என்பது போன்று என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதற்காக பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அதிமுக சிறுமை ஆகி விடுமா?


அதிமுக தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அதனால் தான் அவர் மத்திய அமைச்சர் ஆனார். அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  இது போன்ற கருத்துக்களை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அன்புமணி ராமதாஸ் இனி வரும் காலங்களில் செய்ய வேண்டாம். அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி எங்கள் தரப்பில் இருந்து நிச்சயம் கொடுக்கப்படும். அவர் ஒன்றை சொன்னால் அதிமுக சார்பில் நூறு சொல்வோம்" என கூறியுள்ளார்.