திமுக ஆட்சிக்கு இந்த முறை வருவதற்கு முன் தேர்தல் களத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் தமிழகத்தின் வீதிகளில் ஓடும் ,என்று அடுக்கடுக்கான தேர்தல் வாக்குறுதிகளை தங்களின் தடித்தகுரலில் மக்கள் மத்தியில் முழங்கித்தான் ஆட்சிக்கு வந்தார்கள்.    அப்படி முழங்கிய சில பிரதானமான முழக்கங்களை கோடிட்டு காட்டவிரும்புகின்றேன்.


தேர்தல்களத்தில் அரசு ஊழியர்களை தங்கள்வசப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்களுக்கு முந்தயகால பென்சன் வழங்கும் திட்டத்தை வழங்கப்போவதாக முழங்கினார் ஸ்டாலின்,  நடுத்தரமக்களை ஏமாற்றுவதற்காக பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு 5ரூபாய் குறைப்பதாக ஒரே போடாக போட்டார், குடும்ப பெண்களின் வாக்குகளை வாங்குவதற்காக ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்போவதாக சொன்னார், மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஏமாற்றும் வகையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு உடனே ரத்துசெய்யப்படும் என்று அறிவித்தார். iஇது மட்டுமா நகைகடனும், கூட்டுறவு தள்ளுபடி செய்யப்படும் என்றார்.


இப்படி இப்படியாக நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின்போது அள்ளித் தெளித்தார்கள். ஆட்சிக்கு வருவதற்கு அடுத்தளத்தை அமைத்த வாக்குறுதிகளின் நிலை இந்த நூறு நாளில் என்ன வாகியிருக்கிறது, ஒவ்வொருவர் மீதும் கடன் இருக்கிறது என்று வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின்  அரசின் நிதியமைச்சர் ‘மஞ்சள் அறிக்கை ’ யை கொடுத்துடுத்து விட்டார்.                                          




 


தமிழக அரசின் இந்த மஞ்சள் கடிதாசி மட்டுமே நூறுநாள் சாதனையாக எடுத்துக்கொண்டாலும் சில கேள்விகள் எனக்கு எழுவதை தவிர்க்க முடியவில்லை. தேர்தலின் வாக்குறுதி கொடுக்கும் போதும் அதற்கு முந்தய காலகட்டத்திலும் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் யார்? அவர் கடந்த கால நிதிநிலை அறிக்கைகளை படிக்கவில்லையா? அல்லது படித்தும் அவருக்கு புரியவில்லையா? அமெரிக்காவில் படித்ததால் தனக்குத்தான் புரிந்தது என்கிறாறா? இல்லையென்றால் 2011 ஆம் ஆண்டு 1.5லட்சம் கோடி கடன் ஒவ்வொரு ஆண்டும் உயரும் போது அது எந்த திட்டங்களுக்காக வாங்கப்பட்டது அது எப்படி பயன்பட்டது என்ற விளக்கங்களை அப்போதய அரசிடம் கேள்வி கேட்டு விளக்கம் பெறாதது ஏன்?


 



கேபி. ராமலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்


இல்லை அப்போதய எதிர்கட்சிதலைவருக்கு அவ்வளவு விவரம் தெரியாது என்கிறாரா?  இது இன்றைய முதலமைச்சராக இருக்கும் அன்றைய எதிர்கட்சி தலைவரை அவமானப்படுத்துவதாக  ஆகாதா? இல்லை இல்லை எல்லாவிவரங்களும் முந்தய எதிர்கட்சிதலைவருக்கு தெரியும் என்றால் தேர்தல் காலத்தில் இவ்வளவு வாக்குறுதிகளை கொடுத்தது மக்களை ஏமாற்றுவதற்கா? அப்படியென்றால் இவர்களை நம்பி வாக்களித்த தமிழக மக்கள் ஏமாளிகளா?  ஊழலற்ற நிர்வாகமா ?நடத்துகிறார்கள்,மத்திய அரசு இலவசமாக வழங்குகிற தடுப்பூசிக்கு கூட திமுக நிர்வாகிகள் டோக்கன் வாங்கிவைத்துக்கொண்டு டோக்கனுக்கு ரு200முதல் ரூ300வரை வசூலிக்கிறார்களே! நெல்கொள்முதல் நிலையங்களில் அந்தபகுதி விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யாமல் வெளிவியாபாரிகள் கொண்டுவரும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதே! குறிப்பட்ட அளவிற்கு மேல் 1கிலோ முதல் 2கிலோவரை அதிகம் எடை கூட்டி விவசாயிகளிடம் வாங்குவதும் சாக்குப்பையுக்கு பணம்கொடு என்று விவசாயிகளிடம் வசூழிப்பதும் இந்த நூறு நாள் ஆட்சியில் நடைபெறும் மிகச்சாதாரணமான ஊழல்.


பெரிய ஊழல் என்றால் சமீபத்தில் முந்தைய ஆட்சியில் முடிக்கப்பட்டு இறுதி நிலுவைத்தொகை பாக்கியுள்ள பெரியதிட்டங்களுக்கு வெளிப்படையாக ஒப்பந்ததாரர்கள் மாநாடுபோட்டு மொத்த திட்ட மதிப்பீட்டிற்க்கும் 4% தரவேண்டும் என்று நிர்ண்யம் செய்து வசூழிப்பது. இதுதான் இந்த நூறு நாள் ஆட்சியின் சாதனையென்றால் அது சாதனைதான் என்று வேதனையோடு ஏற்றுக்கொள்கிறேன்.


இப்போது ஒட்டுமொத்தமாக இந்த நூறுநாளில் நல்லது நடக்கவில்லையென்றும் சொல்லமாட்டேன் மத்திய பேரரசின் தலைவர் பாரதபிரதமர் மோடி அவர்களின் அனைத்து உதவியையும் பெற்று கோவிட் 19 தீநுண்மி இரண்டாவது அலை பரவாமல் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் வெற்றிபெற்றுள்ளது அதற்கு என் இதயபூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.