“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனும் அவர் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு துளிர்த்தது. மே 7 அன்று அவர் கையெழுத்திட்ட, 2,07,66,000 குடும்ப அட்டைதாரர்களுக்கான ரூ-4,000 கொரோனா நிவாரணம், லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டு எளியோர் மனங்களில் வார்க்கப்பட்ட பால், அரசின் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் செலவுகளும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஏற்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா என்ற பாகுபாடில்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் முதலமைச்சரிடம் மனு அளிப்பதற்கான தனித்துறை ஆகிய முதல் ஐந்து ஆணைகள் அந்த எதிர்பார்ப்புக்கு அடிப்படை.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


இதன் நீட்சியாகப் பின்னர், நகரப்பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மாறுபாலினத்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் என விரிவுபடுத்தப்பட்டது. அரசாங்கத்துக்கு அனுப்பப்படும் மனு கிணற்றில் போட்ட கல்லாகிவிடும் என்ற நிலைமையில் ஒரு மாற்றமாக, கொடுத்த  மனு என்ன ஆயிற்று என்று மக்கள் நேரில் சென்று கேட்கவும் அதிகாரிகள் பதிலளிக்கவும் வழி செய்யும் தொகுதியில் முதலமைச்சர் அலுவலக ஏற்பாட்டில் பெறப்படும் மனுக்கள் கணினிப் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரையில் 22,256 பேருக்குப் பட்டா, 20,455 பேருக்கு உதவித்தொகை, 19,664 தனி மற்றும் பொதுக்கட்டமைப்புப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏற்க முடியாத கோரிக்கைகள் குறித்த தகவல்கள் மனுதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏனைய மனுக்களின் நிலை பற்றிய தகவல்கள் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.


தங்களின் செயல்முறைகளுக்காக மட்டுமல்லாமல், தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத நேர்மைக்காகவும் தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ளவர்களான இறையன்பு தலைமைச்செயலராகவும், உதயசந்திரன், உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முதல்வரின் தனிச்செயலர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள். பொருளாதாரத் திட்டங்களை முன்மொழிய முனைவர் ஜெயரஞ்சன் துணைத்தலைவராகச் செயல்படும் மாநில வளர்ச்சிக் கொள்கை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. முதலமைச்சருக்கு நேரடியாக ஆலோசனைகள் வழங்க ஐவர் குழு அறிவிக்கப்பட்டது. பள்ளிப்பாட நூல் உருவாக்கத்தில் பொருத்தமானவர்களுக்குப் பொறுப்பளிப்பு, மருத்துவர்கள் முதல் மருத்துவ ஊர்தி ஓட்டுநர்கள் வரையில் கொரோனா போராட்ட முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி, ஊடகவியலாளர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு,  காவலர்களுக்கு ஊக்கத்தொகை, உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர், பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த வேளாண்மையை முன்னால் நிறுத்திடத் தனி நிதிநிலை அறிக்கை, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனித்துறை, விளையாட்டுத்துறையில் இளைஞர்களுக்கான சிறப்புப் பயிற்சி ஏற்பாடுகள்… என்று செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள 100 நடவடிக்கைகளில் ஒவ்வொன்றும் கண்கூடானது.


உற்சாக நடவடிக்கைகள்


அறநிலையத்துறையின் பொறுப்பில் உள்ள ஆலயங்களின் சொத்துகள் விவரம் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும், அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உதவித்தொகை, திருக்கோவில்களுக்குக் குடமுழுக்கு, கோவில் நிலங்களில் நந்தவனங்கள் போன்ற அறிவிப்புகளும், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சித்தரித்துப் பகைமூட்ட முயல்வோரை வாயடைக்கச் செய்துள்ளன. சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம், நாகூர் கந்தூரி திருவிழாவுக்கு இலவசமாகச் சந்தனக்கட்டைகள் போன்ற நடவடிக்கைகள் சிறுபான்மை மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை.


மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் பரவலான வேலைவாய்ப்புகளிலும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் பங்களிப்பு முக்கியமானது. ஒன்றிய அரசின் பல்வேறு ஆணைகள் தங்களைத்தான் கடுமையாகத் தாக்குகின்றன என்ற இத்தொழில்கள் சார்ந்தோரின் வேதனைக்கு, முதலீட்டு மானியம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒத்தடமாக வந்துள்ளன. கடந்த ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையையும், அது போன்ற பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான திட்டங்களையும், கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தையும் எதிர்த்துப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டது முக்கியமானதொரு நடவடிக்கை. அந்தப் போராட்டங்கள் சமூகவிரோதிகளால் தூண்டிவிடப்பட்டவை என்பதாகக் கொச்சைப்படுத்தி ஒட்டப்பட்ட முத்திரையை இந்த நடவடிக்கை கிழித்திருக்கிறது. அத்துடன், இத்தகைய போராட்டச் செய்திகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்த ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீது புனையப்பட்ட வழக்குகளும் விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பது, களப்போராளிகள் கருத்துப்போராளிகள் இருதரப்பாருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.


 


பண்பாட்டுத் தளத்தில்


மாநிலத்தின் வளர்ச்சி பொருளாதாரத் தளம் சார்ந்தது மட்டுமல்ல. பண்பாட்டுத் தளத்திலும் பயணிப்பது அது. எழுத்துலகில் சிறப்பாகப் பங்களிப்போருக்கான “இலக்கிய மாமணி” விருது, சிறந்த புத்தகங்கள் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக நூலகங்களை மேம்படுத்தும் அணுகுமுறைகள், சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகிவிட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, அந்த அடையாளத்தை அழிக்கப் பாய்ந்த அலட்சியங்களிலிருந்து புத்துணர்ச்சியோடு மீட்பதற்கான நடவடிக்கை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான முயற்சி ஆகியவை அந்தப் பண்பாட்டுத்தளப் பயணத்திற்கான வாகனங்களே. இது மேலும் விரிவடைந்து, பண்பாட்டு வேர்களாகவும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களும் தொடங்கப்பட வேண்டும்.


மாநில வேர்களில் ஒன்றுதான் மொழியுரிமை. அதனைப் பாதுகாப்பது, தமிழார்வத்தைச் செழித்து வளரச் செய்வதோடும் இணைய வேண்டும். தமிழ் வழி பயின்றோருக்கு அரசுப் பணிகள், செம்மொழி ஆய்வு மையத்திற்குப் புத்துயிர்ப்பு போன்ற அறிவுப்புகள் அவ்வாறு இணைவது பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. மாநில உரிமைகளில் அமிலத்தை ஊற்றும் கொடுமை என்று கல்வியாளர்கள் புதிய தேசியக் கல்விக் கொள்கையைச் சாடும் சூழலில், தமிழகக் கல்விக் கொள்கை தேவை என்ற மாற்று முழக்கமும் எழுப்பப்பட்டு வந்தது. இப்போது, மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்குவதற்குக் கல்வியாளர்களும் வல்லுநர்களும் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கப்பட்டிருப்பது அந்த முழக்கம் செயல்வடிவமாகும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை வற்புறுத்தும் ஒன்றிய அரசு மாநிலக் கொள்கை முன்னேறிச் செல்ல வழிவிடுமா, முட்டுக்கட்டை போடுமா?  வரும் நாட்களில் மக்கள் கவனிக்க வேண்டியது அது.



 


இப்படிப்பட்ட சிந்தனைகள் வளர்வதற்கு அடித்தளமிடுகிற தகைசான்ற பணிகளைச் செய்தவர்கள் உயர் மதிப்பிற்கு உரியவர்கள். அதற்கென “தகைசான்ற தமிழர் விருது” என்று உருவாக்கியதோடு, முதல் விருதுக்கு உரியவராக, தமிழ் மண்ணின் அரசியல்-சமூக-பண்பாட்டு முன்னேற்றத் தடங்களோடு இணைந்திருப்பவரான வாழும் வரலாறு பெரியவர் என். சங்கரய்யா அவர்களை அறிவித்திருப்பதே ஒரு தகைசான்ற செயல்தான். அவரது நூறாயுசு இந்த விருதின் மூலம் அரசு விழாவாகவே கொண்டாடப்படுவதில் உழைப்பாளி வர்க்கம் பெரு மகிழ்ச்சியடைகிறது.


சறுக்கலின்றி தொடர்வதற்காக


சட்டமன்ற நூற்றாண்டு உள்ளிட்ட இத்தகைய நிகழ்வுகளைத் தடபுடல் விழாவாக்கிவிடாமல் எளிய முறையில் மேற்கொள்வதிலும் இனி பின்பற்றத்தக்க முன்னுதாரணம் படைக்கப்படுகிறது என்றால் மிகையில்லை. அதே வேளையில், விமர்சித்தாக வேண்டும் என்பதற்காகவே விமர்சிக்க வேண்டியதில்லை என்றாலும், விமர்சனத்திற்கு உரியவற்றைச் சுட்டிக்காட்டாமல் இருந்துவிடக்கூடாது. அந்த விமர்சனங்கள், பெருமிதத்திற்குரிய வகையில் தொடங்கியிருக்கும் இந்தச் சாதனைப் பயணம் சறுக்கலின்றிச் சிறப்பாகத் தொடர்வதற்காகத்தான்.


ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை, பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நூறு நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்ற அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, இதையெல்லாம் சகித்துக்கொள்ளமாட்டாதவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்பதை எதிர்பார்த்து உரியவகையில் கையாள்வதற்கான முன்தயாரிப்புகளை மேற்கொள்ளவில்லை என்றும், ஏற்கெனவே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக இது தொடர்பாக வழக்கு நடந்துகொண்டிருக்கிறபோது, தனி நீதிபதி முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தக்கதல்லை என்று வாதாட அரசு வழக்குரைஞர்களும் அதிகாரிகளும் தவறிவிட்டார்கள் என்று சுட்டிக்காட்டியிக்கிறார் மூத்த வழக்குரைஞரும், தலைமை நீதிபதி முன்னிலையிலான வழக்கை நடத்திவருகிறவருமான ‘சிகரம்’ ச.செந்தில்நாதன். அரசுத் தரப்பின் இப்படிப்பட்ட சறுக்கல்கள், நல்ல நடவடிக்கைகளுக்குத் தடையாகிவிடக்கூடாது, அரசுக்கு உண்மையிலேயே இதில் முழு அக்கறை இல்லை என்ற பேச்சுக்கும் சாதகமாகிவிடக்கூடாது.


பொருளாதார நிலைமை குறித்து நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளையறிக்கை, பல உண்மை நிலவரங்களைக் காட்டுகிறது. ஆனால், மின்வாரியம் பற்றிய பகுதியில், நிதிச் சுமைக்கு ஒரு முக்கியக் காரணமாக தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படும் ஊதியம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாரியத்தில் சுமார் 42,000 பணியிடங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படாமலிருக்கும் நிலையில், பணியில் உள்ளவர்கள் தங்கள் மீதுதான் அந்தக் கூடுதல் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது என்ற சூழலிலும் கடமையுணர்வோடு உழைத்து தடையற்ற மின்சாரத்தையும், வாரியத்திற்கு வருவாயையும் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இவர்களால் நிதிச்சுமை என்பது அந்தக் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் விடுவதற்கான சாக்காகிவிடக்கூடாது.


இத்தகைய மாற்றுப் பார்வைகள் தேவையாக இருக்கும்போது, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவித்தொகை பற்றிய திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும், 2008 திமுக ஆட்சியின் அரசாணைப்படி தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுவோரை நிரந்தரப் பணியாளர்களாக்கும் அறிவிப்பு இப்போது இடம்பெறும், ஊரக நூறு நாள் வேலைச்சட்டத்தின்படி இவர்களுக்கு வேலை வழங்குவது உறுதிப்படுத்தப்படும், பல்நோக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும், தனியார் துறை வேலைவாய்ப்பு சட்டப்படி உறுதிப்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கைக்காகக் காத்திருந்தார்கள். அந்தக் காத்திருப்பின் முடிவு ஏமாற்றம்தானா என்று இப்போது ஏக்கத்தோடு கேட்கிறார்கள்.


பதினோராம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை கொண்டுவந்த வினாத்தாள் முறை, ஒரு நுழைவுத்தேர்வு போல இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அது விலக்கிக்கொள்ளப்பட்டு, ஏற்கத்தக்க ஒரு நடைமுறை அறிவிக்கப்பட்டது. அதே போன்ற அணுகுமுறையோடு இப்படிப்பட்ட விமர்சனங்களையும் கவனத்தில் கொண்டு, சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால், இந்த நூறுநாள் சாதனை ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட வேண்டுமென மக்கள் மனம் வாழ்த்தும்.