தேர்தல் முடிந்து மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் பதவியேற்ற திமுக அமைச்சரவை இந்த நூறு நாளில் ஆட்சியை சிறப்பாக செய்து வந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு பத்திரம் வாசித்திருக்கும் நிலையில், அமைச்சரவையில் சிறப்பாக செயலாற்றிய டாப் 5 அமைச்சர்கள் யார் யார் என்று பார்ப்போம் :-
- பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டின் நிதித் துறை அமைச்சராக ஸ்டாலின் யாரை நியமிக்கப்போகிறார் என்று மக்களும் கட்சியினரும் குழம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு அதில் எந்த குழப்பமும் இல்லை. ஏனெனில், அவர் மனதில் இருந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ஒவ்வொருமுறை மாநில அரசின் பட்ஜெட்க்கும் பிறகும் அறிவாலயத்தில் அவர் வைக்கும் பிரஸ்மீட்டே அடுத்த நிதி அமைச்சர் இவர்தான் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியிருந்தன. ஓட்டுக்கு பணம் கொடுக்கவே மாட்டேன் என உறுதியாக இருந்து இரண்டாவது முறையாக மதுரை மத்திய தொகுதியில் வென்று, எம்.எல்.ஏ ஆனவர். இன்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்.
திமுக ஆட்சி அமைந்ததும் அரசின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை, திடகாத்திரமாக நின்று நிறைவேற்றி காட்டினார். வெள்ளை அறிக்கை வெளியீட்டின்போது, சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் ஒரு பொருளாதார பேராசிரியர் போல அதன் விவரங்களை வெளியிட்டார் என சமூக வலைதளங்களில் புகழ்மாலை பொழிந்தார்கள் நெட்டிசன்கள். சரி, வெள்ளை அறிக்கையை வெளியிட்டுவிட்டார் நிதி நிலை அறிக்கைக்கு என்ன செய்யப்போகிறார் என நினைத்தபோது, காகிதமில்லா முதல் இ-பட்ஜெட்டை தாக்கல் செய்து, 3 மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்தி, பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
எதற்கும் எவர்க்கும் அஞ்சாதவர் என பெயரெடுத்த பிடிஆர் உதிர்க்கும் கருத்துகள் எல்லாம் அதிரடி ரகம், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற அறிவிப்பை இப்போது செயல்படுத்த வாய்ப்பில்லை, இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகையை இந்த ஆண்டே வழங்குவோம் என கூறவில்லை என்றெல்லாம் பேட்டிக் கொடுத்த பிடிஆர், இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்தும், ஏழ்மை நிலையில் உள்ள இல்லத் தரசிகளுக்குதான் உரிமைத் தொகை என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவில்லாதவர், அவருக்கு பொருளாதாரம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது என பேட்டி கொடுத்து பிரஷர் ஏற்றினார். ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பற்றி உதிர்த்த கருத்துகள் அரசியல் களத்தில் நெருப்பை கொளுத்தி போட்டது, சத்குரு பற்றி பேச பிடிஆருக்கு என்ன அருகதை இருக்கிறது என ஏகத்துக்கு எகிறி குதித்தார் ஹெச்.ராஜா. பழனிவேல் தியாகராஜன் குறித்த பின்னணியை கையில் எடுக்கப்போகிறோம், அவர் குடும்பம் முதல் எல்லாவற்றையும் பேசுவோம் என எச்சரித்த நிலையில், இதுபற்றி பி.டி.ஆரிடம் கேட்டபோது நான் நாட்டின் நிதி அமைச்சர் இப்படி நாய் குலைப்பதற்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என ஒரே போடாக போட்டார்.
சில நாட்கள் சைலண்ட் மோடில் இருந்த, பிடிஆர் வைலண்ட் மோடுக்கு போனது டெல்லி ஜி.எஸ்.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்தான். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற அந்த விவாதத்தில் ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என ஒவ்வொரு வரிக்கும் சொல்லி ஒவ்வொருவரையும் உசுப்பேற்றினார் என்று ஊடகங்கள் சொன்னாலும், அந்த கூட்டத்தில் அவர் எடுத்த வைத்த வாதங்கள் வலிமையானவை. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது முறையாக இல்லை. ஜி.எஸ்.டி கட்டமைப்பே சரியாக இல்லை என தன் ஆளுமையையும் தமிழ்நாட்டின் நிலையையும் டெல்லியில் அரங்கேற்றம் செய்தார். தமிழ்நாட்டின் நிதி நிலையை சீர் செய்யும் திறமையும் வலிமையும் வங்கியில் பணியாற்றிய அனுபவம் மிக்க பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிரம்ப இருப்பதாகவே நம்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2. தங்கம் தென்னரசு
அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மீண்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சராக ஆக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர் தங்கம் தென்னரசு. ஏனென்றால் முந்தைய திமுக ஆட்சியில் இவர் செயல்பட்ட விதம் அப்படி. பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையையும் மேம்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளும் சீர்த்திருத்தங்களும் அனைவராலும் பாரட்டப்பட்டன. ஆனால், இந்த முறை ஸ்டாலினின் திட்டம் வேறு மாதிரியாக இருந்தது. அதனால்தான் பொறியியல் படித்த தங்கம் தென்னரசுவை தொழில் துறை அமைச்சராக நியமித்தார் அவர். தமிழ் மீது மாறாப்பற்றுக்கொண்டிருக்கும் அவரிடமே தமிழ் வளர்ச்சித்துறையையும் ஒப்படைத்தார்.
கொரோனா தமிழ்நாட்டில் உச்சநிலையில் இருந்தபோது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க தொழில்துறையை முடுக்கிவிட்டு மூச்சுவிடவைத்தது, கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, இறுதி சடங்கு வரை இருந்து கவனித்தது, கட்டுமான பொருட்களின் விலை கடல் அலைபோல் சீறி எகிறிக்கொண்டிருந்தபோது அதனை குறைக்க நடவடிக்கை எடுத்தது, தமிழ் மக்களின் வாழ்வியல் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் அகழாய்வு பணிகள் தொய்வின்றி நடைபெற ஊக்கம் கொடுத்து, தொல்லியல் துறையினரை உற்சாகப்படுத்தியது, ஒவ்வொரு முறையும் மண்ணில் புதைந்த பண்பாட்டு அடையாளங்கள் கண்டெடுக்கப்படும்போது, தனது சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்டு சங்கப்பாடல்களை கோடிட்டு காட்டி கொண்டாடியது என இந்த நூறு நாளில் கவனம்பெற்ற தங்கம் தென்னரசுவைதான், குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வந்தபோது பொறுப்பு அமைச்சராக நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நாணைய சேகரிப்பில் பெரும் ஆர்வம் கொண்ட இவரிடம், இன்று பழங்கால வரலாறுகளை சொல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் இருக்கின்றன. அதே நாணையம் போன்ற குணத்தை கொண்டவர், குழந்தையென்றாலும் மரியாதை கொடுத்து அழைக்கும் பண்பாளர் என திருச்சுழி மக்களால் புகழப்படும் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டு தொழில்துறையில், தொல்லியல் துறையில் ஒரு யுக புரட்சியை ஏற்படுத்துவார் என தீர்க்கமாக நம்புகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்
3.அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மு.க.ஸ்டாலினின் அன்பிற்கும் பாசத்திற்கு உரிய நபர், உதயநிதியுடன் நகமும் சதையுமாக இருக்கும் நெருங்கிய நண்பர் என பந்தத்துடன் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, இந்த முறை அமைச்சர் பதவி ’கன்ஃபார்ம்’ என்பது உடன்பிறப்புகளுக்கு தெரிந்த ரகசியம்தான். ஆனால், அவரை பள்ளிக் கல்வித்துறைக்கு ஸ்டாலின் அமைச்சர் ஆக்குவார் என்பதைதான் எவரும் எதிர்பார்க்கவில்லை.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி என்பது மிகுந்த பொறுப்பு மிக்கது, மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்புடையது, அதற்கு அனுபவம் மிக்க நபர் அமைச்சராக இருப்பதுதான் சரியாக இருக்கும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அனுபவம் என்பது அப்படியே வானத்தில் இருந்து குதித்து வந்து வந்துவிடுவதில்லை. வாய்ப்பு கொடுத்தால்தானே வானத்தை தொடுகிறோமா அல்லது வாய்வார்த்தை ஜாலங்கள் செய்கிறோமா என்பது தெரியும். அப்படி கொடுக்கப்பட்ட வாய்ப்பை இந்த நூறு நாளில் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார் அன்பில் மகேஷ்.
மாநில அமைச்சர் இல்லாமல் அதிகாரிகளை வைத்து கூட்டம் நடத்துவதை ஏற்கமுடியாது என, மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை கூட்டத்தையே புறக்கணித்து, பி.எஸ்.பி.பி, சுஷில் ஹரி பள்ளியில் எழுந்த பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளை அணுகிய விதம், 12 வகுப்பு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று ஒரு தரப்பு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தபோது, மாணவர்களின் உடல்நலன் தான் முக்கியம் என தேர்வை ரத்து செய்தது, நீட் தேர்வு நடத்தப்பட்டால் அதனை எதிர்த்து போராடுவோம் என அறிவித்தது என இந்த நூறு நாட்களில் கவனம் பெற்றுள்ளார் அன்பில் மகேஷ். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தாலும், விளையாட்டு, உடற்பயிற்சி, உற்சாகம் என வலம் வரும் அன்பில், மு.க.ஸ்டாலினின் அன்புக்கு பாத்திரமானவர்.
4. மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடே கொரோனா 2ஆம் அலையில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும்போது சுகாதாரத்துறை அமைச்சராக யாரை நியமிக்கப்போகிறார் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியிருந்தது. சுகாதாரத்துறையை மருத்துவத் துறை என மாற்றி மா.சு என்கிற மா.சுப்பிரமணியத்தை அதற்கு அமைச்சர் ஆக்கினார் அவர். மு.க.ஸ்டாலினின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருக்கும் மா.சுப்பிரமணியன், களப் பணிகளில் கைத் தேர்ந்தவர் என பெயர் எடுத்தவர். அதனால்தான் மருத்துவத்துறை அவருக்கு மடைமாற்றப்பட்டது. பதவியேற்ற நாள் முதலே ஆலோசனைக் கூட்டங்கள், ஆய்வுகள் என அதிரடி காட்டத் தொடங்கிய மா.சு, அதிகளவில் தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்த சென்னையில், அவை குறையை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். அடுத்து கோவையில் தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அங்கேயும் விசிட் அடித்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்.
தடுப்பூசிகளை கிராமந்தோறும் கொண்டு சேர்த்தது, மலை கிராமங்கள் வரை நடந்தே சென்று மருத்துவ உதவி செய்தது என மணிக்கணக்கில்லாமல் பணியாற்றி வருகிறார் மா.சுப்பிரமணியன். நானும் 25 ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்காக மருந்து உட்கொண்டு வருகிறேன், மருந்து மாத்திரைகள் இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு உயிர் கூட இனி போகவிடமாட்டேன் என மராத்தான் ஓட்டம் போலவே அவர் பேசினாலும், அது மக்கள் மனதில் நின்றது.
கூடுதல் தடுப்பூசிகள் கேட்டு கடிதம் எழுதியதோடு நிற்காமல் நேரடியாக டெல்லி பறந்து சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக சுகாதாரத்துறையை முன்நின்று வழிநடத்திக்கொண்டிருக்கிறார் மா.சு
5. சேகர்பாபு
பல நேரம் காவி, வேட்டி வெள்ளை சட்டை சகிதமாக ஆன்மிகம் பாதி, அரசியல் பாதி என வலம் வந்த சேகர் பாபுவை, இந்து சமய அறநிலையத்துறை ஆக்கினார் முதலவர் மு.க.ஸ்டாலின். பதவியேற்ற சில தினங்களிலேயே ஆலோசனைகள், ஆய்வுகள் என அமைதி கப்பிக்கிடந்த இந்து சமய அறநிலையத்துறையை அறம் வளர்க்கும் துறையாக்க முயன்றார். கொரோனா காலக்கட்டத்தில் கோயில்களில் அன்னதானம் என அறிவித்தது, கோயில்களை தனியாருக்கு ஒன்றும் தாரைவார்த்துக் கொடுத்து விட முடியாது என்று அதிரடி காட்டியது என சுற்றிச் சுழன்றார் அவர்.
குடமுழுக்கு நடத்தாத கோயில்களில் குடமுழுக்க நடத்த நடவடிக்கை எடுத்தது, கோயில் பூசாரிகளுக்கும் கொரோனா நிவாரணம் அளித்தது, கோயில் சொத்துக்களையும் அதன் வருவாய் தொடர்பான விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றியது என பம்பரமாய் சுழன்ற அவர், அன்னைத் தமிழில் அர்ச்சனை என அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும், பெண்களும் கோயில் அர்ச்சகர்கள் ஆக பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்ததும் ஏகபோக வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமில்லாமல், இந்து சமய அற நிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அதிரடியாக மீட்டது, இந்த 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செயல்பாடுகள் அனைவரும் புருவம் உயர்த்தி பார்க்கும் அளவுக்கு இருக்கும் என நம்பிக்கையூட்டியது என அவர் அடித்த பால் ஒவ்வொன்றும் சிக்ஷர் ரகம்தான். சென்னையில் கலைஞர் நினைவிட பொறுப்பாளராக இருக்கும் சேகர்பாபு, மு.க.ஸ்டாலினின் நெருக்கத்திற்கு உரியவராகவும் உள்ளார்.