போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து சேலம் கோட்டை பகுதியில் சேலம் மாநகர் மாவட்ட கழகம் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம் தலைமயில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை மற்றும் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, "திமுக ஆட்சியில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் உத்தரவின் பேரில் எங்கேயும் கஞ்சா செடிகள் அளிக்கப்பட்டுள்ளதா? என்று பார்த்தால் இல்லை. வழக்கில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கூட நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை ஆவதற்கு காவல்துறையினரே காரணமாக இருந்துள்ளனர். திமுகவில் அயலக அணியை போதை பொருள் கடத்துவதற்காகவே திமுக உருவாக்கி உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை திரைத்துறையில் முதலீடு செய்வது தேர்தலில் பயன்படுத்துவது போன்ற செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது.



மேலும், உயர் வீரியம் கொண்ட போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதை தமிழக காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்க உளவுத்துறை தான் கண்டுபிடித்தது. மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியது என குறிப்பிட்ட அவர், டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பெரும்பாலும் திமுகவினரின் ஆலையில் தயாரிக்கப்படுபவையே.


டாஸ்மாக் கடையில் விலை பட்டியல் இட்டு மதுவை விற்பனை செய்யும் இந்த அரசு, மது ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்படும் விலையை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கீழ் கேட்டால் தரமறுக்கின்றது. அதிமுக ஆட்சி போல் திமுக ஆட்சி கடன் வாங்காது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2,46,000 கோடி கடன் பெற்றுள்ளார். அத்தைக்கு மீசை முளைத்தால்தான் திமுக ஆட்சியில் நிதி நிலைமை சீராகும் என்ற அவர், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறையை ஏன் நிறைவேற்றவில்லை. சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யவில்லை. அதிமுக ஆட்சி மக்களின் சுமையை தாங்கிக்கொண்ட ஆட்சி. திமுக ஆட்சி மக்கள் மீது கடுமையான சுமையை ஏற்றிய ஆட்சி. போதை மாநிலமாக மாறிய தமிழகத்தை காப்பாற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமியை விட்டால் வேறு யாரும் இல்லை" என பேசினார்.