சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "வணக்கம் சென்னை. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளியாக சென்னை திகழ்கிறது. எனக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு மிகவும் பழமையானது.
"தமிழ்நாட்டுக்கு வருவது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது"
சென்னை வரும்போதெல்லாம் உற்சாகம் அடைகிறேன். தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் அடைகின்றனர். சென்னையில் வளர்ச்சி திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. சென்னையில் மெட்ரோ, விமான நிலையங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெத்து வருகிறோம்" என்றார்.
வளர்ந்த பாரதத்துடன், வளர்ந்த தமிழ்நாடு என்ற தீர்மானத்தையும் நான் கையில் எடுத்துள்ளேன். விரைவில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற வேண்டும். சென்னை போன்ற நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் எரிசக்தி திட்டத்தை தொடங்கியுள்ளேன்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மீது சரமாரி குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, "குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்களின் குடும்பத்தை மனதில் வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால், நான் நாட்டு மக்களை மனதில் வைத்து அரசியல் செய்கிறேன். குடும்ப ஆட்சி நடந்தபோது 18,000 கிராமங்களில் மின்சாரம் இல்லை.
"தமிழக மக்களின் பணத்தை கொள்ளையடிக்கவிட மாட்டேன்"
நெருக்கடியான காலக்கட்டத்தில், திமுகவினர் வெள்ள மேலாண்மைக்கு பதிலாக விளம்பரம் செய்வதில் மும்முரமாக இருந்தனர். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பாஜக மத்திய அரசு உறுதியாக உள்ளது. இங்குள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இந்திய அரசு நேரடியாக பணம் அனுப்புவதால் திமுகவினருக்கு பிரச்சனை.
தமிழக மக்களின் பணத்தை கொள்ளையடிக்க மோடி உங்களை அனுமதிக்க மாட்டார் என்பதை அவர்களுக்கு (திமுக) சொல்ல விரும்புகிறேன். மேலும் நீங்கள் கொள்ளையடித்த பணம் மீட்கப்பட்டு மாநில மக்களுக்காக செலவிடப்படும். இது மோடியின் உத்தரவாதம்.
திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர்களுக்கு குடும்பமே முதன்மையானது. இது அவர்களின் குறிக்கோள். ஆனால், எனக்கு தேசமே முதன்மையானது. அதனால்தான், இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் என்னை அவமதிப்பது என புதிய சூத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
"நாடுதான் எனது குடும்பம்"
மோடிக்கு குடும்பம் இல்லை என்கிறார்கள். குடும்பம் உள்ளவர்கள் ஊழல் செய்ய உரிமம் பெற்றுள்ளார்களா? எனது குடும்பத்தை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டுள்ளனர். நான் வீட்டை விட்டு வெளியேறியது எனக்காக அல்ல. நாட்டிற்காக.
இந்த நாடுதான் எனது குடும்பம்.140 கோடி மக்களே எனது குடும்பம். யாருமில்லாதவர்களும் மோடிக்கு சொந்தம், மோடி அவர்களுக்கும் சொந்தம். இந்தியாவே எனது குடும்பம். அதனால்தான், ஒட்டுமொத்த நாடும், தங்களை மோடியின் குடும்பம் என அழைத்து கொள்கிறார்கள்" என்றார்.