பற்றி எரியும் வீட்டில் தண்ணீரை ஊற்றாமல் பெட்ரோலை ஊற்றினால் என்னவாகும். இன்னும் அல்லவா கொழுந்துவிட்டு எரியும். அதுபோல்தான் ஆகியுள்ளது தஞ்சை மேயர் சண்.ராமநாதன் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த விவகாரம். இதை இன்னும் ஒரு படி மேல் கொண்டு போய் மீண்டும் சர்ச்சை எழ செய்துள்ளார் தஞ்சை மேயர். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டிதான் இப்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.



தஞ்சை மாநகராட்சிக்கு நடந்த மேயர் தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே திமுகவின் தஞ்சாவூர் மேயர் வேட்பாளராக 45-வது வார்டு உறுப்பினர் சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டார். மேயர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டாலும்... அவர் முன்னிலை, இவர் முன்னிலை என்று தகவல்கள் உலா வந்தபோதிலும் கட்சிக்காரர்கள் மத்தியில் சண்.ராமநாதனுக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்று உறுதியான எண்ணம் ஏற்பட்டது.

காரணம் உதயநிதியின் தீவிர ஆதரவாளர், விசுவாசி என்றே சண்.ராமநாதனை கூறலாம். இதனால் உதயநிதியின் ஸ்ட்ராங்கான சப்போர்ட் சண். ராமநாதனுக்கு கிடைக்கும். அவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் செய்திகள் வந்தது. அது அப்படியே நடந்தது. தஞ்சை மாநகராட்சி மேயர் வேட்பாளராக சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டார்... ஜெயித்தார். மேயரானார்.






கவுன்சிலராக இருந்தபோது காட்டிய விசுவாசத்தை விட தற்போது கூடுதல் விசுவாசத்துடன் உதயநிதியிடம் உள்ளார் தஞ்சை மேயர் சண்.ராமநாதன் என்கின்றனர் கட்சியினர். இப்படி விசுவாசம், தீவிர ஆதரவாளராக இருக்கும் தஞ்சை மேயர் சண்.ராமநாதன் தற்போது பெரும் சங்கடம் மற்றும் சிக்கலில் தவித்து வருகிறார். இதற்கு அவர்தான் காரணம் என்பதும் மறுக்க முடியாத ஒன்று.

டெல்டா மாவட்டங்களில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில் தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை விட சிறப்பான சம்பவத்தை நடத்தினார் தஞ்சை மேயர் சண்.ராமநாதன். பெருமையும், புகழும், மரியாதையும் உடைய மேயர் அங்கியை அணிந்தபடியே உதயநிதி காலில் விழுந்தார் மேயர் சண்.ராமநாதன். இதையடுத்து இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் மேயர் சண்.ராமநாதன் சில வார்த்தைகளில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த கருத்தும் தற்போது எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றியது போல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: “உதயநிதியை பார்த்ததும் எமோஷனல் வந்துவிட்டது, உதயநிதிதான் எங்கள்  கடவுள். அதுமட்டுமின்றி அவரை என் அப்பா, அண்ணன் போல் நினைத்து காலில் விழுந்தேன் என்று தெரிவித்தவரிடம் கடவுள் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் வளர்ந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடவுள் ஆகிவிட்டாரா என்ற கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லாமல் தொடர்பை துண்டித்து விட்டாராம் மேயர் சண்.ராமநாதன்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண