அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்து, 2 முறை அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை அவர் மீதோ அவருக்கு உதவியர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கந்தசாமி ஐ.பி.எஸ் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்ப பிறகு, அதிமுக அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருந்தது. ஆனால், பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டதே தவிர அவர்கள் மீது நடவடிக்கையோ, கைதோ இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 25 – 11 – 2021ஆம் தேதியே வேலுமணிக்கு ஊழல் செய்ய உதவியாக இருந்ததாக சந்தேகப்படும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட 12 அரசு அதிகாரிகளை விசாரிக்க அனுமதிகோரி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை.
ஆனால், கடிதம் எழுதி 7 மாதங்கள் கடந்தும் இன்னும் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கொடுக்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அதிகாரிகளை விசாரித்தால்தான் வேலுமணி மீதான புகாருக்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அது உதவியாக இருக்கும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை கருதுகிறது. அதன் அடிப்படையிலேயே அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் அளிக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அறப்போர் இயக்கம் உள்ளிட்ட ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அவர் ஊழல் செய்வதற்கு உதவியாக இருந்ததாக தமிழ்நாடு அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய அதிகாரிகளின் பட்டியல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதன்படி
- கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த கே.விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
- சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்
- உள்ளாட்சி பணிகள் சம்பந்தமான உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை கொண்ட கந்தசாமி ஐ.ஏ.எஸ்
- சுகாதாரத்துறையில் துணை ஆணையராக இருந்த மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ்
- கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி
- சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார்
- சென்னை மாநகராட்சியின் நிர்வாக பொறியாளர் செந்தில்நாதன்
- கோவை மாநகராட்சி பொறியாளர் சரவணகுமார்
- கோவை மாநகராட்சி துணை பொறியாளர் ரவிக்கண்ணன்
- கோவை மாநகராட்சியில் பணியாற்றிய அனிதா ஜோசப்
- சென்னை மாநகராட்சியில் முதன்மை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற புகழேந்தி
- சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் செந்தில்நாதன்
ஆகிய இந்த 12 பேரையும் விசாரிக்க அனுமதி தந்தால் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களில் பல ஆதாரங்கள் சிக்கும் என்று லஞ்ச ஒழித்துப்புதுறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அரசு அனுமதி கொடுக்குமா ? ஊழல் செய்தவர்களும் ஊழலுக்கும் உதவியாக இருந்தவர்களும் சிக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.