Vijat Tvk Maanadu: விஜயின் அரசியல் கட்சி பயணத்தை விமர்சிப்பது நெட்டிசன்களா அல்லது அரசியல் கட்சி தொண்டர்களா என கேள்வி எழுந்துள்ளது.


விஜய் அரசியல் பயணம்:


தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது, தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த மாநிலமே எதிர்பார்க்கும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே, சமூக வலைதளத்தில் அவருக்கான ஆதரவும் எதிர்ப்பும் கடுமையாக குவிந்து வருகின்றனர். குறிப்பாக மாநாடு நெருங்க நெருங்க கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது போட்டி நடிகர்களின் ரசிகர்களா? அல்லது அரசியல் கட்சி தொண்டர்களா? என கேள்வி எழுப்பியுள்ளது.


விஜய்க்கு ஆதரவும், எதிர்ப்பும்:


தமிழ்நாடு தாண்டி தேசிய அளவில் பிரபலமான நடிகர்களில் விஜய் முக்கியமானவர். அவருக்கான ரசிகர் பட்டாளத்தின் பலத்தை ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழா, டீசர் மற்றும் டிரெய்லர்களை வெளியிடும் போதும், திரைப்படம் வெளியாகும்போது திரையரங்குகள் விழாக்கோலம் கொள்வதன் மூலம் அறியலாம். குறிப்பாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களின் செயல்பாடு என்பது மிக தீவிரமாக இருக்கும். ரஜினி மற்றும் அஜித் போன்ற போட்டி ரசிகர்களை எதிர்கொள்வது மட்டுமின்றி, திமுக, மற்றும் பாஜக போன்ற அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது விஜயின் அரசியல் பயணத்தை கடுமையாக விமர்சித்து வருவது யார் என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


விஜயை சாடும் ரஜினி & அஜித் ரசிகர்கள்


சமூக வலைதளங்களை பொறுத்தவரை விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் பரம எதிரிகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அண்மைக்காலமாக ரஜினியை பின்னுக்குதள்ளி வசூல் ரீதியாக தமிழ் சினிமாவில் விஜய் முதலிடத்தை பிடித்து விட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. தி கோட் மற்றும் வேட்டையன் படத்தின் வெளியீட்டின் போது கூட, இரு தரப்பு ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டதை காண முடிந்தது. இதன் விளைவாக விஜயின் அரசியல் பயணத்தையும், தவெக மாநாட்டையும் தோல்வியடைய செய்வோம் என ரஜினி ரசிகர்கள் வெளிப்படையாகவே அறிவித்தனர். அதன் விளைவாக, ரஜினி ரசிகர்கள் பலரும் இன்றைய தவெக மாநாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதோடு, பல்வேறு விதமாக எதிர்மறை கருத்துகளை பதிவிட்டு, சில மோசமான ஹேஷ்டேக்குகளையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு அஜித் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


விஜயை அட்டாக் செய்யும் திமுக & பாஜக:


விஜயின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானதில் இருந்து, அரசியல் ரீதியாக திமுக மற்றும் பாஜக இணைய தரப்பில் இருந்தே அதிக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் விஜய் Vs உதயநிதி என இருக்கும் என கூறப்படுவதால், இணைய திமுகவினரும் தவெக தொண்டர்களும் எதிர்த்துக்கொள்கிறார்கள். அதேநேரம், திமுகவிற்கு எதிரான அதிமுகவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையை விஜய் உடைத்துவிடுவார் என்பதால் அவரை பாஜக எதிர்ப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே மற்ற அரசியல் கட்சிகளை காட்டிலும், திமுக மற்றும் பாஜகவினர் மிகவும் தீவிரமாக விஜயை எதிர்த்து வருகின்றனர். தி கோட் படத்திற்கு எதிராக ரஜினி ரசிகர்களுடன் கைகோர்த்து, திமுக மற்றும் பாஜகவினர் களமாடி வந்ததை காணமுடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தவெக மாநாட்டையும் திமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.


அதேநேரம் அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சியினர், ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.