கரூர் திருச்சி சாலையில் தோரணங்கள் பட்டி அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் எம்.சேண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மர்ம ஆசாமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், லாரி டிரைவர் உட்பட 2 பேர் தாக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக தனியார் இன்பிரா நிறுவன சூப்பர்வைசர் கிருஷ்ணமூர்த்தி ( 33) தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார்.



அந்த புகாரில், கடந்த 9ஆம் தேதி லாரியில் எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு பவித்திரம் பகுதியில் இருந்து புலியூர் நோக்கி சென்றுகொண்டிந்த லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டினார். லாரி கரூர்- திருச்சி சாலையில் கோடங்கிபட்டி பிரிவு அருகே வந்தபோது அடையாளம் தெரியாத 3 பேர் லாரியை நிறுத்தினர். அப்போது 2 கார்களில் பலர் வந்தனர். என்னையும் டிரைவர் அன்பழகனையும் லாரியில் இருந்து கீழே இறக்கி, மிரட்டி, அடித்து உதைத்தனர்.





பின்னர் தானேஷ் என்கிற முத்துகுமார் (மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்) என்பவருக்கும் நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளருக்கும் உள்ள வியாபார பிரச்சனையில் அவரும், திருவிக (மாவட்ட ஊராட்சி அதிமுக கவுன்சிலர்) என்பவரும் லாரியை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் என புகாரில் கூறியுள்ளார்.


 




இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸ் ஆய்வாளர் செந்தில்குமார், தானேஷ் என்கிற முத்துகுமார், திருவிக, மதுசூதனன் (கரூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்), கமலக்கண்ணன் (மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர்), நெடுஞ்செழியன் (கரூர் நகர அதிமுக செயலாளர்) மற்றும் பலர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். லாரி எரிப்பு சம்பவத்தில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




 


இதற்கு முன்பாக கடந்த கடந்த 9ஆம் தேதி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நள்ளிரவில் லாரியில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முன்னாள் அமைச்சர் அவர்களாகவே லாரியை டீசல் ஊற்றி பற்ற வைத்துவிட்டு அவர்களாகவே தீயணைப்புத் துறைக்கு கால் செய்து கூறியுள்ளனர். கோடாங்கிபட்டியில் இருந்து வரும் வரை 10 கிலோ மீட்டர் இருப்பதால் 10 கிலோ மீட்டர் அளவில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் லாரியின் டயர்கள் எரிந்து விடும். ஆனால், இந்த லாரியின் டயர்கள் எதுவும் எரியவில்லை. முன்பகுதி பெயிண்ட் மட்டுமே எரிந்து உள்ளது. அதனால்தான் சந்தேகம் உள்ளது. அதை தொடர்ந்து லாரி ஓட்டுநர் மற்றும் சூப்பர்வைஸர் வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்கள் கட்சிக்காரர்கள் சிலரை இந்த லாரி எரிப்பு வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த வழக்காக இருந்தாலும் நாங்கள் சட்டப்படி சந்திக்க தயார் என்று கூறி இருந்தார்.