தெலுங்கு தேச கூட்டணி ஆட்சி:


ஆந்திராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகனின் YSR காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகவும், ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.


துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்ற முதலே, அவரது செயல்பாடுகளானது, பேசப்பட்டு கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். இவர் திருப்பதி லட்டு விவகாரத்தை கையில் எடுத்தது , இந்தியா முழுவதும் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


பவன் கல்யாண் விமர்சனம்:


இந்நிலையில், தற்போது ஆளும் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சரையே அவர் விமர்சித்துள்ளது, ஆந்திர அரசியலில் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.


ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும். எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது. 



ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தகுதியற்றவராக இருப்பதாலேயே ஆந்திராவில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தலைவிரித்தாடுவதாக்வும் தெரிவித்தார்.


தப்பு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும். இல்லையென்றான் நானே உள்துறை அமைச்சர் பொறுப்பையும் ஏற்பேன்.அதற்காக நான் உள்துறை அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என எடுத்துக் கொள்ள வேண்டாம்.


”யோகி ஆதியத்நாத் போல செயல்பட வேண்டும் “:


உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல் நீங்கள் செயல்பட வேண்டும்; வாக்கு சேகரிக்க மட்டும் மக்களிடம் வரக்கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்துறை அமைச்சர் அனிதாவை கடுமையாக விமர்சித்தது, ஆந்திர அரசியலில் மட்டுமல்ல கூட்டணிக்குள்ளேயேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. 


உள்துறை அமைச்சர் அனிதா பதில்:


இந்நிலையில், உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்துள்ளதாவது, “ பவன் கல்யாண் கூறியதில் தவறில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில போலீசாருடன் தொடர்ந்து விவாதித்து வருகிறேன். 


மாநிலத்தில் குற்றங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று துணை முதல்வர் கூறியதில் தவறில்லை. கூட்டணி ஆட்சியில் என்ன நடக்கும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குள்ளநரி போல் காத்திருக்கிறது. “பவன் கல்யாணின் கருத்துகளை நான் மிகவும் நேர்மறையாக எடுத்துக் கொண்டேன். இந்தக் கருத்துகள் தன் மீதான பொறுப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. பவன் கல்யாண் பேசியதில், அரசியல் எதுவும் இல்லை என்றும் ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா கூறினார்.


ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சரே, வேறொரு மாநிலத்தின் முதலமைச்சர் நிர்வாகத்தைப் போல் இருக்க வேண்டும் என கூறியிருப்பது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.